Allahabad: உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் அரசு இடங்களை ஆக்கிரமித்துள்ள மசூதியின் சுவர்களை இஸ்லாமியர்களே அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலகாபாத்தில் நடைபெறவுள்ள கும்பமேளா நிகழ்வுக்காக உத்திரபிரதேச அரசு சாலை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலைகளை ஆக்கிரமித்துள்ள கடைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை இடித்து சாலைகளை விரிவுபடுத்தும் பணி நடந்துவருகிறது. அரசு இடங்களை ஆக்கிரமித்தவாறு, சாலை ஓரத்தில் அமைந்துள்ள ஒருசில மசூதிகளின் சுவர்களை இஸ்லாமியர்களே முன்னின்று அப்புறப்படுத்தினர்.
இந்நிகழ்வால் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும் அவர்களை வெகுவாக பாராட்டினர். மசூதியின் ஒருபகுதியை இடித்துக் கொண்டிருந்த இஸ்லாமியர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,“ சாலைபராமரிப்பு பணிக்கு இடையூறாக உள்ள மசூதியின் ஒருபகுதியை அகற்றிவருகிறோம். இதனால் கும்பமேளா நிகழ்வுக்காக நடைபெறும் சாலைவிரிவாக்க பணி துரிதமாகவும், பிரச்சினைகள் இன்றியும் நடைபெறும். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நாங்கள் அளிப்போம்” என்று கூறினார்.
கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடத்தில், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை இந்த கும்பமேளா நிகழ்வானது வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.