Shahjahanpur, Uttar Pradesh: பிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தர பிரதேச மாநில ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்து, அங்கு இருக்கும் விவசாயிகள் மத்தியில் உரையாற்ற உள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. இந்த வாக்கெடுப்பில் மோடி தலைமையிலான அரசுக்கு மிகப் பெரும் வெற்றி கிடைத்தது. இந்நிலையில், அவர் இன்று உத்தர பிரதேச ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்ய உள்ளார். இந்த மாதத்தில் மட்டும் அவர் உத்தர பிரதேசத்துக்கு போகும் மூன்றாவது பயணம் இது.
இதற்கு முன்னர் அசாம்கர், மிர்சாபூர் மற்றும் வாரணாசிக்கு அவர் பயணம் செய்து பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இந்நிலையில், இன்று நடக்கவுள்ள நிகழ்ச்சிகளை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒருங்கிணைத்திருக்கிறார்.
சமீபத்தில் பிரதமர் மோடி, மேற்கு வங்கத்தில் பேசியபோது, கூரை விழுந்து 90 பேர் காயமடைந்தனர். எனவே, இந்த முறை மேடை கட்டுமானப் பணிகள் மிகவும் கவனமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரும்பு விவசாயம் அதிகம் நடக்கும் பகுதி ஷாஜஹான்பூர். சமீபத்தில் தான் கரும்புக்கான ஆதார விலையை அதிகரித்தது மத்திய அரசு. மேலும், அம்மாநில அரசு, கரும்பு விவசாயிகளுக்காக 8,000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.
பிரதமர் மோடியின் இந்தப் பயணங்கள், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகின்றது.