அபராதம் விதித்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.
Jhabua, Madhya Pradesh: மத்திய பிரதேசம் மாநிலம் ஜாபூவாவில், இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்ற காரணத்திற்காக காவலர் ஒருவர் அபராதம் விதித்த நிலையில், அந்த காவலருடன் காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில், தண்டலா பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ வீர் சிங் பூரிய, விதிகளை மீறிய வாகன ஒட்டியிடம் அபராதம் விதித்த காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.
மேலும், எதற்காக அபராதம் விதிக்கிறீர்கள்? இது ஜாபூவா மாவட்டம் இங்கு எந்த விதிமீறல் சம்பவமும் நடக்காது. நீ எங்கு வசிக்கிறாய்? இதை தினமும் செய்கிறாயா? மக்களுக்கு நீ தொல்லை கொடுப்பதாக எனக்கு தகவல்கள் கிடைத்துள்ளது என வீர்சிங் அந்த காவலரிடம் கடுமையாக பேசுகிறார்.
இதற்கு பதலளிக்கும் அந்த காவலர், ஒரு சட்டமன்ற உறுப்பினராக, சட்ட அமலாக்கத்தை எதிர்க்காமல் அதனை ஆதரிக்க வேண்டும், நாங்கள் இந்த நபரை இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்ற காரணத்திற்காகவே வண்டியை நிறுத்தி பிடித்துள்ளோம் என்று அவர் கூறுகிறார்.
நீங்கள் என்னை அச்சுறுத்துகிறீர்களா? என்னை பணியில் இருந்து நீக்கி விடுவீர்களா? என்னை இந்த மாவட்டத்தில் வசிக்க விட மாட்டீர்களா? நான் உங்களிடம் மரியாதையாக பேசுகிறேன். இது எனது மூத்த அதிகாரியின் உத்தரவு. அவரது உத்தரவை கடைப்பிடிக்க வேண்டியது எனது கடமை என்று அந்த காவலர் கூறுகிறார்.
இது தொடர்பாக ஜாபூவா காவல்துறை மூத்த அதிகாரி விஜய் கூறும்போது, இந்த சம்பவம் தொடர்பாக எம்எல்ஏவிடம் பேசுவதாக தெரிவித்துள்ளார். அந்த வீடியோவையும் நான் பார்த்தேன். அதிகரித்து வரும் வாகன திருட்டு காரணமாகவே வாகன சோதனை செய்து வருகிறோம். அந்த காவலர் அவரது கடமையை செய்கிறார். மக்களுக்கு எந்த தொந்தரவும் அளிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.