துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் கோரிய வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு ஒரு அணியாகவும் செயல்பட்டனர்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீது தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தது. இதில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் ஆகியோர், முதல்வர் பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். எனினும், அந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றார்.
இதையடுத்து, எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் அணிகள் ஒன்றாக இணைந்தன. எனினும், ‘ஒரே கட்சியில் இருந்து கொண்டு அந்த கட்சிக்கு எதிராக சட்டப்பேரவையில் நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 11 எம்எல்ஏக்கள் மீது தகுதிநீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று திமுக கொறடா சக்கரபாணி, அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
எனினும், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘தமிழக அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்த மனு மீதான விசாரணையை விரைவில் நடத்த வேண்டும்' என்று திமுக சார்பில் முறையீடு செய்யபட்டது.
இதைத்தொடர்ந்து, திமுக மற்றும் தங்க தமிழ்ச்செல்வனின் கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால், நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்தார். இந்நிலையில், 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக் கோரும் வழக்கை புதிய அமர்வு இன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி.ஆர்.கவாய் அமர்வு முன் இன்று காலை வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.