தமிழகத்தில் இதுவரை 129.907 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
Chennai: இன்னும் ஒரு சில நாட்களில் தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்கள் நடக்க உள்ள நிலையில், வருமான வரித் துறையினர் சென்னையில், கணக்கில் வராத 15.13 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.
இது குறித்து NDTV-யிடம் பேசிய மூத்த ஐடி அதிகாரி ஒருவர், ‘என்.சபேசன் என்கின்ற கான்ட்ராக்டரிடமிருந்து மட்டும் சுமார் 14.21 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. டோவல் அசோஷியேட்ஸ் நிறுவனத்தை அவர் நடத்தி வருகிறார்' என்று கூறினார். சபேசனின் நிறுவனம், அரசுக்காக பல கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சென்னையில் இருக்கும் ஒரு அபார்ட்மென்ட்டில் பணப் பதுக்கல் பற்றி வருமான வரித் துறையினருக்குத் தகவல் வந்துள்ளது. குறிப்பிட்ட வீட்டு முகவரிக்கு சென்று பார்த்தபோது, பணம் அங்கிருந்து வேறு இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இருந்தும் விடாமல் துரத்திய அதிகாரிகள் நங்கநல்லூரிலிருந்து ஆர்.ஏ.புரம் வரை சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து சபேசனின் வீட்டில் கட்டுக் கட்டாக இருந்தப் பணத்தை கைப்பற்றியுள்ளனர்.
எதற்காக இவ்வளவு பணம் சபேசன் வீட்டில் பதுக்கப்பட்டிருந்தது என்பது குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் ஓட்டுக்காக பணப் பட்டுவாடா செய்யவும் பணம், சபேசன் வீட்டில் வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்று வருமான வரித் துறையினர் சந்தேகப்படுகின்றனர்.
தேர்தல் வருவதையொட்டி, தமிழகத்தில்தான் இதுவரை அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், தமிழகத்தில் 129.907 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசத்தில் 127.855 மற்றும் 119.57 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.