This Article is From May 17, 2020

தற்சார்பு பாரதம் என்ன திடீர் புளியோதரையா? மத்திய அரசை விளாசிய சு.வெங்கடேசன் எம்.பி!!

சுகாதார ஒதுக்கீடு ஜி.டி.பி யில் 3 % வரை இருக்க வேண்டுமென்பது இன்று நேற்றா கோரப்படுகிறது? கடந்த பட்ஜெட்டில் கூட நீங்கள் செய்தது 1.1 சதவீதம் மட்டுமே. இப்போதும் கூட பொதுவான அறிவிப்பாக உள்ளது. ஒதுக்கீடுகளில் எவ்வளவு உயர்வு என்பது சொல்லப்படவில்லை.

தற்சார்பு பாரதம் என்ன திடீர் புளியோதரையா? மத்திய அரசை விளாசிய சு.வெங்கடேசன் எம்.பி!!

கொரோனா தொற்று மற்றும் இதர காரணங்களால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை மீட்டெடுப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 20 லட்சம் கோடி ரூபாய்க்கான சிறப்பு பொருளாதார தொகுப்பினை அறிவித்திருந்தார். இது குறித்த முழு விவரத்தினையும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ச்சியாக அறிவித்து வந்தார். மத்திய அரசி இந்த அறிவிப்புகள் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக அனைத்தும் தனியார் மயம் என்கிற அறிவிப்பினை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான சு. வெங்கடேசன் மத்திய அரசின் அறிவிப்புகள் குறித்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதில் அவர் கூறியுள்ளதாவது..

“ஐந்தாவது நாளான இன்று காலையிலேயே நிதியமைச்சர் தொலைக் காட்சிக்கு வந்து விட்டார். ஐந்து நாட்களிலும் வரவேற்பதற்கு ஒன்றுமில்லையா? ஐந்து நாட்கள் அறிவிப்புகளில் யாருக்கு பொழிந்திருக்கிறது? எவ்வளவு பொழிந்திருக்கிறது? பொழிந்ததாவது போய்ச் சேருமா? என்பவைதானே அளவுகோல்கள்.

அறிவிப்புகளின் தன்மையே அடிப்படையான சந்தேகங்களுக்கு காரணம். இன்று என்ன அறிவிப்புகள்?

* கேந்திர தொழில்களிலும் (Strategic sector) தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுவார்கள்... அவற்றில் எல்லாம் தொழிலுக்கு அதிக பட்சம் 4 அரசு நிறுவனங்கள் மட்டுமே இருக்க முடியும்.... ஒரே பிளாங்க் செக் போல கார்ப்பரேட்களுக்கான பொழிவு.

இந்திய விடுதலை பாரம்பரியத்தில் முகிழ்த்த தற்சார்பு கோட்பாடுக்கும் இவர்கள் திடீர் புளியோதரை போன்று சொல்கிற "தற்சார்பு பாரதத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா?

இவையெல்லாம் அமைதியான, நிதானமான சூழலில் விரிவான கருத்தொற்றுமையோடுஎடுக்கப்பட வேண்டிய மிகப் பெரிய பொருளாதார முடிவுகள். நெருக்கடி மிக்க சூழலில் அவசர அவசரமாக திணிக்கப்படுவது ஏன்?

ஆன்லைன் கல்வி என்ற பெயரில் டாட்டா, மிட்டல் போன்றவர்களின் நிறுவனங்களுக்கு புதிய சந்தை என்கிற இலவச இணைப்பு வேறு.

* இரண்டாவது மாநில அரசுகளின் கடன் அளவு 3% லிருந்து 5 % ஆக (GSDP யில்) உயரும் என்ற அறிவிப்பு. ஆனால் அந்த அறிவிப்பு ஓர் சுருக்கு கயிறோடு வந்திருக்கிறது. அதாவது கூடுதல் கடன் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

அதைப் பெற மத்திய அரசு காண்பிக்கிற பொருளாதார திசை வழியில் மாநில அரசுகள் பயணித்தாக வேண்டும். நிதியமைச்சரே, உங்களின் பொருளாதார அணுகுமுறையில் இருந்து மக்கள் கருத்து மாறுபடுவதால்தானே வேறு அரசியல் கட்சிகள் மாநில ஆட்சிகளில் அமர்கின்றன. மாநில அரசின் செயல்பாடுகளை நீங்கள் தீர்மானிப்பது கூட்டாட்சி மீதான தாக்குதல் அல்லவா! மாநில அரசுகளை தேர்ந்தெடுத்துள்ள மக்கள் கருத்தைப் புறம் தள்ளுவது அல்லவா!

* 100 நாள் கிராமப் புற வேலைத் திட்டத்திற்கு ரூ 40000 கோடி ஒதுக்கீடு உயர்வு என அறிவிப்பு. சுகாதார கட்டமைப்பு வலுப்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு.

பொசிவது போல தோன்றினாலும் அவை போய்ச் சேருமா என்பதே கேள்வி. கரோனா மார்ச் 23 க்கு பிறகுதான் ஊரடங்கு என்ற நிலைக்கு சென்றது. ஆனால் 2019- 20 முழுக்க 100 நாள் வேலைத் திட்டத்தில் கிடைத்த சராசரி நாட்கள் 41 தான். இவர்கள் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கிய 61000 கோடியில் இவ்வளவுதான் கிடைத்தது. அதிலுங்கூட ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு கூலி பங்கில் மாநில அரசுக்கு வைக்கிற பாக்கி தனிக்கதை. நிதியமைச்சரே, இப்போது நீங்கள் சொல்கிற 40000 கோடி இந்தியா முழுக்க 100 நாள் வேலை தர போதுமானதா? சராசரி வேலை நாட்கள் கூடுமா? இப்பவும் குடும்பத்திற்கு ஒருவருக்கு வேலை என்ற விதியை நீங்கள் தளர்த்தவில்லையே! கிராமங்களுக்கு திரும்பிப் போய் குடும்பத்தோடு சேர்ந்துள்ள புலம் பெயர் தொழிலாளர்க்கு எப்படி வேலை கேட்கும்?

சுகாதார ஒதுக்கீடு ஜி.டி.பி யில் 3 % வரை இருக்க வேண்டுமென்பது இன்று நேற்றா கோரப்படுகிறது? கடந்த பட்ஜெட்டில் கூட நீங்கள் செய்தது 1.1 சதவீதம் மட்டுமே. இப்போதும் கூட பொதுவான அறிவிப்பாக உள்ளது. ஒதுக்கீடுகளில் எவ்வளவு உயர்வு என்பது சொல்லப்படவில்லை.

வரவேற்போம் பெரும்பான்மை மக்களுக்கு பொழிந்தால்... ஆனால் பொழிந்திருப்பதோ கார்ப்பரேட்டுகளுக்கு

ஆறுதல் அடைவோம் கொஞ்சமாவது பொழிந்தால்... ஆனால் காகிதத்தில் மட்டுமே இருந்து கைவசமாகா விட்டால் என்ன பயன்...

போய்ச் சேராது என்பது எங்கள் சந்தேகம் மட்டுமல்ல... கடந்த கால அனுபவம்...

எப்படி வரவேற்பது சொல்லுங்கள்....“

என அவர் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளார்.

.