ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேஷியாவில் நடைப்பெற்று வருகின்றன. 14வது நாளான இன்று, வெண்கலப் பதக்கத்திற்கான ஆண்கள் ஹாக்கி போட்டி நடைப்பெற்றது.
இந்த போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
போட்டியின் தொடக்கம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது. போட்டி தொடங்கிய 3வது நிமிடத்தில் இந்தியாவின் ஆகாஷ்தீப் முதல் கோல் அடித்தார். இதன் மூலம், 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வந்தது.
அதனை தொடர்ந்து, போட்டியின் 50வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டாவது கோல் அடித்தார். இதன் மூலம், 2-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை பெற்று வந்த அடுத்த நிமிடம், பாகிஸ்தானின் முகமது அடிக் கோல் அடித்தார். எனவே, 2-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் இருந்தன.
இரண்டாவது கோல் அடித்து போட்டியை சமன் செய்ய பாகிஸ்தான் அணியினர் போராடினர். எனினும், இந்தியாவின் சிறப்பான தடுப்பாட்டத்தால் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
பரபரப்பாக நடைப்பெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், ஆசிய விளையாட்டு ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்தியா வெண்கலப் பதக்கம் பெற்றது. இதுவரையில், 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கலப் பதக்கங்களை இந்தியா கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.