இந்தியா-சீனா நிலைப்பாடு: இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே வன்முறை மோதல் ஜூன் மாதம் கால்வானில் நடந்தது
ஹைலைட்ஸ்
- சீன துருப்புகளின் ஊடுருவலை மத்திய அமைச்சரகம் ஒப்புக்கொண்டது
- ஆவணம் வெளியான இரு தினங்களில் தளத்திலிருந்து ஆவணம் நீக்கப்பட்டுள்ளது.
- ஆவணம் நீக்கப்பட்டதால் பிரதமர் ஏன் பொய் சொல்கிறார்? என ராகுல் கேள்வி
New Delhi: சமீபத்தில் கிழக்கு லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற இந்திய சீன ராணுவ வீரர்களுக்கிடையேயான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், லடாக்கில் சீன துருப்புகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதை பாதுகாப்பு அமைச்சகம், கடந்த செவ்வாய் கிழமை தனது வலைத்தளத்தின் செய்தி பிரிவு ஆவணத்தில் ஒப்புக் கொண்டது. ஆனால், தற்போது இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த செய்தி நீக்கப்பட்டுள்ளது.
கால்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இந்தியாவும் சீனாவும் விரிவாக்கம் தொடர்பாக ஐந்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.
“மே 5, 2020 முதல் உண்மையான ஆக்கிரமிப்பு கோடு (எல்ஏசி) மற்றும் குறிப்பாக கால்வான் பள்ளத்தாக்கில் சீன ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. மே 17 அன்று குங்ராங் நாலா, கோக்ரா மற்றும் பாங்காங் த்சோ ஏரியின் வடக்குக் கரையோரங்களில் சீனத் தரப்பு மீறியது. -18.” என பாதுகாப்பு அமைச்சகம் செய்தி பிரிவு ஆவணத்தில் குறிப்பிட்டிருந்தது. மேலும், நிலைமையைத் தணிக்க இரு தரப்பினரின் ஆயுதப் படைகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஜூன் 6 ஆம் தேதி கார்ப்ஸ் தளபதிகளின் கொடி கூட்டம் நடைபெற்றது என்றும், இருப்பினும், ஜூன் 15 அன்று இரு தரப்பினருக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் நடைபெற்றுள்ளது என்றும் ஆவணத்தில் கூறப்பட்டிருந்தது.
“சீன ஆக்கிரமிப்பு காரணமாக 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம்” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவேயாகும்.
ஆனால், இன்று காலை பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தி பிரிவிலிருந்து இந்த ஆவணம் நீக்கப்பட்டுள்ளது. “சீன ஆக்கிரமிப்பு காரணமாக 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவம்” என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ஒரே ஆவணம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
நீக்கப்பட்ட ஆவணம் குறித்த அறிக்கையை மேற்கோள் காட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “பிரதமர் ஏன் பொய் சொல்கிறார்?” என டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக ஜூன் மாதம் நடந்த சீன எல்லைப் பிரச்னை குறித்த அனைத்து கட்சி கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, “நமது எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை அல்லது எந்தவொரு பகுதியையும் கைப்பற்றவில்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட உள்கட்டமைப்பு காரணமாக நமது ரோந்து திறன் அதிகரித்துள்ளது.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.