This Article is From Jun 19, 2020

லடாக் மோதல்: பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! சோனியா, ஸ்டாலின் பங்கேற்பு!

India-China border tension: கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். 

லடாக் மோதல்: பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்! (File photo)

New Delhi:

லடாக்கில் இந்தியா-சீனா மோதல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த கூட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி மற்றும் லாலு யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

முன்னதாக, நேற்று மாலை அனைத்து கட்சித் தலைவர்களையும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார். 

இதனிடையே, ராஷ்டிரிய ஜனதாதளத்தின் தேஜஸ்வி யாதவ் தனது ட்விட்டர் பதிவில், எதற்காக தனது கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். 


ஆம் ஆத்மி மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் விடுபட்டது ஏன் என்பதற்கு வட்டாரங்கள் அளித்த தகவலின்படி, நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்களுக்கு மேல் கொண்டுள்ள கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆம் ஆத்மிக்கு நாடாளுமன்றத்தில் 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கு நாடாளுமன்றத்தில் 5 உறுப்பினர்கள் கொண்டுள்ளனர். அப்படியென்றால், பட்டியலில் நாங்களும் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டம் என்பது அனைவரும் தங்களது கருத்துகளை கூறுவதற்கு அனுமதிப்பதே என்று ராஷ்டிரிய ஜனதாதளத்தை சேர்ந்த மனோஜ் குமார் தெரிவித்துள்ளார். 


கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா-சீனா மோதலில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசுக்கு கேள்வி எழுப்பி வந்தனர். 

கடந்த ஐந்து தசாப்தங்களில் இல்லாத அளவு இந்த மோதல் நிகழ்ந்துள்ளது. இந்த மோதலில் சீனத் தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தெரிகிறது. எனினும், சீன நாட்டு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எந்த புள்ளிவிவரங்களையும் வெளியிடவில்லை. எனினும், ராணுவ வட்டாரங்கள் குறைந்தது 45 சீன வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. 

இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறிய ராகுல் காந்தி, ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, ராகுலின் கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்தார். அதில், ஜெய்சங்கர் கூறுகையில், எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்களிடம் எப்போதும் ஆயுதம் இருக்கும். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதலின்போது இந்திய வீரர்களிடம் ஆயுதங்கள் இருந்தன. 1996, 2005 ஒப்பந்தங்களின்படி துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்று கூறியுள்ளார். 

.