இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இந்த காற்று மாசு பற்றி அக்கறையே இல்லை. சுகாதாரமாகவும் அவர்கள் இருப்பதில்லை- ட்ரம்ப்
London: சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக உலக நாடுகள் தொடர்ந்து விவாதித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் காற்று மாசு கட்டுப்பாடு தொடர்பாக அவர்களுக்கு இருக்கும் பொறுப்பை நிறைவேற்றுவதில்லை” என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்துக்குப் பயணம் செய்துள்ள ட்ரம்ப், அங்குள்ள ஐடிவி என்ற டிவி சேனலுக்குப் பேட்டியளிக்கும் போது இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்துள்ளார். ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக போடப்பட்ட ‘பாரீஸ் ஒப்பந்தத்தில்' இருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது. பேட்டியின் போது ட்ரம்ப், “உலகிலேயே மிகவும் சுத்தமான காற்றைக் கொண்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று” எனப் பேசியுள்ளார்.
“பிரின்ஸ் சார்லஸிடம் நான் பேசினேன். முதலில் 15 நிமிடம்தான் நாங்கள் இருவரும் பேச இருந்தோம். ஆனால், அது 1 மணி நேரத்துக்கு மேல் நீண்டது. அவர் பருவ மாற்றம் குறித்து நிறைய பேசினார்” என்று பேட்டியின் போது சொன்னார்.
ட்ரம்ப் தொடர்ந்து, “அமெரிகாகவில்தான் மிகவும் சுத்தமான காற்று உள்ளது. நாளுக்கு நாள் எங்கள் நாட்டின் காற்றின் தரம் உயர்ந்து கொண்டே போகிறது.
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு இந்த காற்று மாசு பற்றி அக்கறையே இல்லை. சுகாதாரமாகவும் அவர்கள் இருப்பதில்லை.
அந்த நாடுகளில் இருக்கும் சில நகரங்களுக்குச் சென்றால், உங்களால் சுவாசிக்கக் கூட முடியாது. அக்கறையுடன் இந்த விஷயத்தை அவர்கள் கையாள்வதில்லை” என்று விரிவாக பேசினார்.
முன்னதாக ட்ரம்ப், பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும்போது, “பாரீஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் சேரலாம், சேரமலும் இருக்கலாம். அமெரிக்காவுக்கு சாதகமாக அந்த ஒப்பந்தம் இல்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகள் மீது அந்த ஒப்பந்தம் கறாராக நடந்து கொள்ளவில்லை. ஆனால், அமெரிக்காவை தண்டிக்கும் வகையில் அது உள்ளது” என்று கூறினார்.