சனிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லை பிரச்னை தொடர்பாக இந்தியா - சீனா ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை சனிக்கிழமை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லடாக்கில் இரு தரப்பும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியா தரப்பில் லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - சீனா இடையே 1962-ம் ஆண்டில் போர் நடைபெற்றது. கடந்த 2017-ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லடாக் பகுதியில் மீண்டும் எல்லைப் பிரச்னை வெடித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
20 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் இருநாடுகளும் தங்களது 3,500கி.மீ எல்லை பிரச்சினையை தீர்த்துக் கொள்ள முடியவில்லை. ஒருவருக்கொருவர் வசம் உள்ள தொலைதூரப் பகுதிகளின் பெரிய பகுதிகளுக்கு உரிமை கோர முடியவில்லை.
அதுபோல் சர்ச்சைக்குரிய தென்சீனக் கடல் மற்றும் தைவான் நீரிணைப்புகளில் அமெரிக்க கடற்படை தனது ரோந்துப் பணிகளை மேற்கொண்டதன் மூலம் அமெரிக்காவுடனான சீனாவின் இராணுவ மோதல் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகியவை கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தோற்றம் குறித்து வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா-சீனா இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஆனால் அதை ஏற்க இந்தியா நாசூக்காக மறுத்துவிட்டது. இதேபோல் சீனாவும் டிரம்பின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது.