This Article is From Jun 03, 2020

இந்திய - சீன எல்லையில் டென்ஷன்: பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு!

இந்திய - சீன எல்லைப் பதற்றம் குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்துரையாடினார்

இந்திய - சீன எல்லையில் டென்ஷன்: பதற்றத்தைத் தணிக்க இரு தரப்பும் எடுத்த முக்கிய முடிவு!

இந்திய தரப்புதான், இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • லடாக் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது
  • கடந்த சில வாரங்களாக இரு தரப்பும் எல்லையில் படைகளை குவித்து வருகின்றன
  • சீனா, எல்லைக் கட்டுப்பாட்டை மீறியதாக இந்திய தரப்பு புகார்
New Delhi:

லடாக் பகுதிக்கு அருகே இந்திய - சீன எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கு இரு தரப்புகளும் தொடர்ந்து தங்களது ராணுவப் படைகளைக் குவித்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த லடாக்கில் வரும் சனிக்கிழமை (ஜூன் 6) இரு தரப்பும் சந்திக்க உள்ளன. 

இந்திய தரப்புதான், இந்தப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆகவே, இந்திய எல்லைப் பகுதியான சுஷுல்-மோல்டோவில்தான் இந்த சந்திப்பு நடைபெறும். 

லடாக்கில் உள்ள 14 இந்திய ராணுவத் துறுப்புகளின் கமாண்டரான லெஃப்டெனென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் இந்தப் பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்குவார். 

லடாக் பகுதியிலேயே இருக்கும் பிராந்திய கமாண்டர்கள், பிரச்னையை சுமூகமாக தீர்க்க தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்த முடிவை தரவில்லை. ஆகவே, தற்போது 14 துறுப்புகளின் கமாண்டர் தலைமையில் சந்திப்பு நடக்க உள்ளது. சனிக்கிழமை சந்திப்பு குறித்து ராணுவ உள்வட்டாரம், “இந்த சந்திப்பு பற்றி நேர்மறையான எண்ணம் நிலவுகிறது,” எனத் தகவல் தெரிவித்துள்ளது. 

1962 ஆம் ஆண்டு இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையில் போர் நடந்தது. அந்தப் போரைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு கிழக்கு இமாலயப் பகுதியில் உள்ள டோக்லாமில் 3 மாதங்கள் இரு தரப்பு ராணுவங்களும் மல்லுக்கட்டின. அதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் இப்போதுதான் மிகப் பெரும் எல்லைப் பிரச்னை வெடித்துள்ளது. 

லடாக் மற்றும் சிக்கிம் பகுதியை ஒட்டிய பகுதிகளில் எல்லைக் கோட்டைத் தாண்டி வந்து, சீன ராணுவம் அத்துமீறியது என்று இந்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் சீன அரசோ, இந்திய தரப்புதான் சீனாவின் எல்லைக்குள் ஊடுறுவியது என சொல்லியது. 

இந்திய - சீன எல்லைப் பதற்றம் குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கலந்துரையாடினார்.

முன்னதாக டிரம்ப், இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று தெரிவித்திருந்தார். பிரதமர் மோடி, இது குறித்து தன்னிடம் பேசினார் என்றும் டிரம்ப் கூறினார். ஆனால், அவரின் வாதத்தை மறுத்தது இந்திய அரசு தரப்பு. சீனாவும், இரு நாட்டுப் பிரச்னையில் மூன்றாவது நபரின் மத்தியஸ்தம் தேவையில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. 


 


 

.