கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 10 நாடுகளில் இந்தியா 9 வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
New Delhi: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது சமீபத்திய நிலவரப்படி 1.88 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் உலக அளவில் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 9வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. பிரான்ஸ் 1,88,752 லட்சம் எண்ணிக்கையுடன் தொற்று பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல அமெரிக்காவும் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. அந்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 18 லட்சமாக அதிகரித்துள்ளது. அதை தொடர்ந்து பிரேசில் 5 லட்சம் கொரோனா நோயாளிகளை கொண்டு இரண்டாவது இடத்திலும், 4 லட்சம் நோயாளிகளை கொண்டு ரஷ்யா மூன்றாவது இடத்திலும் உள்ளது.
இந்தியாவை பொறுத்த அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டனர். முதன் முறையாக நாட்டில் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 5,000ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 193 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஏறத்தாழ 60 நாட்களுக்கு பிறகு நாட்டில் முழு முடக்க நடவடிக்கையில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து முழு முடக்க நடவடிக்கையை ஜூன் 30 வரை நீட்டித்து அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை காரணமாக இந்தியா, தொற்று பாதித்த உலக நாடுகளின் பட்டியிலில் 7 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மத்திய அரசு அன்லாக் இந்தியா என புதியதாக முழு முடக்க நடவடிக்கையை தளர்வுகளுடன் அமல்படுத்துவதாக அறிவித்தது. இந்த முழு முடக்க நடவடிக்கையில், ஜூன் 8 முதல் வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் வழிப்பாட்டுத் தலங்கள் திறப்பதற்கு கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர மற்ற பகுதிகளில் அனுமதியளித்திருக்கிறது. அதேபோல மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படுகின்றன. முன்னதாக இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை இருந்த ஊரடங்கு நேரம் மாற்றப்பட்டு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் இங்கிலாந்து நாளை முதல் தங்கள் நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த முழு முடக்க நடவடிக்கையை திரும்ப பெறுவதாக அறிவித்திருப்பதாக ஏஎப்பி (AFP ) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே போல பிரேசிலை பொறுத்த அளவில், ஊரடங்கை விட பொருளாதார வீழ்ச்சி கொடுமையானது என அந்நாட்டு அதிபர் ஜெய்ர் போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார்.