நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 40 லட்சத்தினை கடந்துள்ளது.
சர்வதேச அளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 83,341 புதிய கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டிருந்தனர். தற்போது மொத்த உயிரிழப்பானது 68,472 என அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கவலையளிக்கும் விதமாக தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஆயிரத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழகம், கர்நாடகா, உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் மட்டும் 62 சதவிகிதம் நோயாளிகளை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், உலகளாவிய இறப்பு விகிதத்தை பொறுத்த அளவில் இந்தியா குறைந்த அளவிலேயே பதிவு செய்து வருவாதாக மத்திய சுகாதாரத்துறை சமீபத்தில் தெரிவித்திருந்தது.
தற்போது உள்ள மொத்த நோயாளிகளில் 0.5 சதவிகிதத்தினர் செயற்கை சுவாச கருவியின் மூலமாகவும், 2 சதவிகிதத்தினர் தீவிர சிகிச்சை பிரிவிலும், 3.5 சதவிகிதத்தினர் பிராண வாயு உதவியுடன் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.