டெல்லி, இந்த மாத தொடக்கத்தில், கொரோனா தொற்று பரவலில் இந்தியாவின் மிக மோசமான நகரமாக மும்பையை முந்தியது
ஹைலைட்ஸ்
- நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தினை கடந்துள்ளது.
- மகாராஷ்டிராவில் பாதிப்பு 1,52,765 ஆக அதிகரித்துள்ளது
- தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா
New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ஒரே நாளில் 17 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 5,000க்கும் அதிகமானோர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன் காரணமாக இம்மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையானது 1,52,765 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மேற்கு வங்கம், மற்றும் தமிழகத்திலும் ஒரே நாளில் அதிக அளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 15,301 நபர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 407 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக ஏழாவது நாளாக இந்தியா 14 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகளை தினந்தோறும் அடையாளம் கண்டுள்ளது.
வெள்ளிக்கிழமை நிலவரப்படி மகாராஷ்டிராவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.52 லட்சத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,024 பேர் இம்மாநிலத்தில் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 175 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் விகிதமானது 17.52 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே போல உயிரிழந்தவர்களின் விகிதமும், 4.65 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் 62,829 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். தேசிய வர்த்தக தலைநகரான மும்பையில் ஒட்டு மொத்த பாதிப்பு 72,175 ஆக உயர்ந்துள்ளது.
தேசிய தலைநகர் டெல்லியை பொறுத்த அளவில், கொரோனா தொற்று நோயாளிகளுக்கான படுக்கை வசதியில் தொடர்ந்து நெருக்கடியை சந்தித்து வருகிறது. டெல்லியில், கடந்த 24 மணி நேரத்தில் 3,460 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 77,240 ஆக அதிகரித்துள்ளது. அதே போல கடந்த 24 மணி நேரத்தில் 2,326 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது 47,091 நபர்கள் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 63 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது 2,492 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்து 622 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 15 பேர் தனியார் மற்றும் 31 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,358 பேர் குணம்பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 357 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்கள் மற்றும் சிகிச்சை குணம் அடைந்தவர்களை தவிர்த்து தமிழகத்தில் தற்போது 32 ஆயிரத்து 305 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் நேற்று 1,956 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து செங்கல்பட்டில் 232 பேருக்கும், மதுரையில் 190 பேருக்கும், வேலூரில் 148 பேருக்கும், திருவள்ளூரில் 177 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தினை பொறுத்த அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 542 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 16,190 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 10,353 பேர் குணமடைந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஹரியானாவை பொறுத்த அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 12,884 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 421 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் ஒட்டு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி, சென்னை, தானே, மும்பை, பால்கர், புனே, ஹைதராபாத், ரங்கா ரெட்டி, அகமதாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவை 10 நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 54.47 சதவிகித பங்கினை கொண்டுள்ளது. டெல்லி சமீபத்தில் மும்பை நகர பாதிப்பினை விட அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றானது சர்வதேச அளவில் இதுவரை 4.89 லட்சம் மக்களை கொன்றுள்ளது. இதுவரை 96.04 லட்சம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.