This Article is From May 14, 2020

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 80 ஆயிரத்தை தாண்டியது!!

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மட்டும் 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றை விட இன்று 1,602 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 80 ஆயிரத்தை தாண்டியது!!

தேசிய தலைநகரில் மொத்தம் 8,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80 ஆயிரத்தை தாண்டியது
  • 26 ஆயிரம்பேருடன் முதலிடத்தில் மகாராஷ்டிரா உள்ளது
  • கொரோனா வைரஸ் இரட்டிப்பாக அதிகரிக்கும் நாட்கள் குறைந்துள்ளன
New Delhi:

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இன்று 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று மாலை 11 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 80,759 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த 2 நாட்களில் மட்டும் மிகச் சாதாரணமாக 10 ஆயிரம்பேருக்கு இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாக மாறுவது 13.9 நாட்களாக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தகவல் அளித்திருந்தார்.

நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. இங்கு மட்டும் 27,524 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. நேற்றை விட இன்று 1,602 பேருக்கு மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைவாழ் பகுதியான தாராவியில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் 9,674 பேருடன் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் 9,267பேருடன் குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் இருக்கிறது. 

முன்னதாக 472 புதிய பாதிப்புகளுடன் டெல்லியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 ஆயிரத்தை கடந்தது. தேசிய தலைநகரில் மொத்தம் 8,470 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 3,045 பேர் குணம் அடைந்துள்ளனர். 115 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 

கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத்தை அடுத்து 4-வது இடத்தில் டெல்லி உள்ளது. இங்கு 10 நாட்களில் பாதிப்பு இருமடங்காக அதிகரிக்கிறது. 

சோதனை அதிகரிக்கப்படுவதால் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

செவ்வாயன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 4-வது முறையாக பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்றும், புதிய விதிமுறைகளுடன் பொது முடக்கம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் நம்முடன் நீண்ட காலத்திற்கு இருக்கும் என்றும், அதனுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 134 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 54 பேர் மகாராஷ்டிராவையும், 29 பேர் குஜராத்தையும், 20 பேர் டெல்லியையும், 9 பேர் மேற்கு வங்கத்தையும், 7 பேர் மத்திய பிரதேசத்தையும், 4 பேர் ராஜஸ்தானையும் சேர்ந்தவர்கள். 

உயிரிழந்தவர்களில் 70 சதவீதம்பேர் நீண்ட கால நோய் மற்றும் ஏற்கனவே கடுமையான நோய் பாதிப்பில் இருந்தவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

.