சென்னையில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
New Delhi: இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், சமூக பரவல் ஏற்பட்டிருக்கிறதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த சூழலில் நாட்டில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருக்கிறது.
நாட்டின் மெட்ரோ நகரங்களான மும்பை, சென்னை மற்றும் டெல்லியில் மற்ற நகரங்கள், மாநிலங்களைக் காட்டில் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் இங்கு மட்டும் பாதிப்பு சமூக பரவல் நிலையை அடைந் த விட்டதா என்ற கேள்விகள் எழத் தொடங்கின. இதுபற்றி மத்திய அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசு நிர்வாகங்கள் தெரிவித்திருந்தன.
கொரோனா தொடர்பாக எழுந்திருக்கும் சந்தேகங்கள் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் பல்ராம் பார்கவா கூறியதாவது-
சமூக பரவல் என்றால் என்ன என்பதற்கு உலக சுகாதார நிறுவனத்திடமே சரியான விளக்கம் இல்லை. இந்தியாவில் சமூக பரவல் ஏதும் ஏற்படவில்லை. சமூக பரவல் என்பது குறித்து பல்வேறு தரப்பினர் விவாதித்து வருகின்றனர். இந்தியாவில் அத்தகைய பாதிப்பு உண்டாகவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.