This Article is From Mar 14, 2019

மசூத் அசாரை சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்க சீனா முட்டுகட்டை! - இந்தியா ஏமாற்றம்!

சர்வதேசப் பயங்கரவாதப் பட்டியலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த மசூத் அசாரை சேர்க்க சீனா நான்காவது முறையாக முட்டுக்கட்டை போட்டுள்ளது. சீனாவின் இந்த முடிவு ஏமாற்றமளிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவன் மசூத் அசார்.

NEW DELHI:

ஜம்மு - காஷ்மீர் புல்வாமாவில் கடந்த பிப்.14ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து, தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத தலைவர் மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இதற்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனா, மசூத் அசார் பெயரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. பல நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதி பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கத் தயாராக இருந்தபோதிலும், சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்தது.

மசூத் அசார் பெயரை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பட்டியலில் சேர்க்கும் தீர்மானத்தில் மார்ச் 13-ம் தேதிக்குள் சர்வதேச நாடுகள் கருத்து தெரிவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த தீர்மானத்தின் மீது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் எந்த கருத்தையும் சீனா தெரிவிக்கவில்லை. இதனால் சீனாவின் முடிவு இந்தியாவை அதிருப்தியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சீனாவின் முடிவு ஏமாற்றமளிப்பதாக கூறியுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பயங்கரவாத அமைப்பின் தலைவரை சர்வதேச பட்டியலில் சேர்க்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளை சீனா தடுத்துள்ளது என்றும், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதற்கான முயற்சிகளை இந்தியா தொடர்ந்து எடுக்கும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

மசூத் அசார் ஐநாவின் பட்டியலில் சேர்க்கப்பட்டால் அவர் ஐநாவின் உறுப்பு நாடுகளுக்கு பயணிக்க முடியாது. அத்துடன் அந்த நாடுகளிடமிருந்து அவர் எவ்வித நிதி மற்றும் ஆயுதங்களை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பார்க்க - "பாலகோட் தாக்குதலில் இதுவரை வெளிவராத புதிய சாட்டிலைட் படங்கள்"

.