மாலத்தீவுக்கு நிதியுதவி வழங்கிய இந்தியா
Male: கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த மாலத்தீவுகளுக்கு இந்தியா 250 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்கியுள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக மாலத்தீவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீ கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக பிரதமர் மோடியிடம் தொலைபேசி வாயிலாக அவர் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தற்போது மாலத்தீவுக்கு இந்திய அரசு சார்பில் 250 மில்லியன் டாலர் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி பெறுவதற்கான விழா மாலத்தீவில் இன்று நடைபெற்றது. இதில் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித், நிதியமைச்சர் இப்ராஹிம் அமீர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் பாரத் மிஸ்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியா - மாலத்தீவுகளுக்கு இடையேயான நல்லுறவை வெளிக்காட்டும் விதமாக அமைந்துள்ளது.