இம்ரான் கான், காஷ்மீர் விவகாரம் குறித்து ட்வீட் செய்திருந்தார்
காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது ட்விட்டரில் கருத்திட்டிருந்தார். அந்த ட்வீட்டில், இந்திய பாதுகாப்புப் படைகளை அவர் சாடியிருந்தார். அவரின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
காஷ்மீரில் மீண்டும் வன்முறை அதிகரித்து வருகிறது. இதையொட்டி தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் தொடர்ந்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘இந்திய பாதுகாப்புப் படையினரால் காஷ்மீரில் அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தியா, காஷ்மீர் விவகாரத்தை அமைதியான முறையில் தீர்க்க முயற்சி எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஐ.நா விதிமுறைகள்படியும் காஷ்மீர் மக்களின் விருப்பத்துக்கு ஏற்றபடியும் இந்தியா, இந்த விஷயத்தில் தீர்வு காண வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், ‘பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலப்பரப்பில் தொடர்ந்து ஓங்கி வரும் தீவிரவாதத்தை ஒடுக்க அந்நாடு முயற்சி மேற்கொள்ள வேண்டும். அந்நாட்டு மக்களின் எண்ணத்துக்கு ஏற்றபடி, தீவிரவாத கட்டுமானத்தைக் குலைக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும், தீவிரவாதிகள் குறித்து புகழாரம் சூட்டுவதையும் நிறுத்திவிட்டு பாகிஸ்தான் சொந்த நாட்டுப் பிரச்னையைப் பார்க்க வேண்டும்' என்று இம்ரான் கான் கருத்து பதிலடி கொடுத்தார்.
இம்ரான் கான், பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து தொடர்ந்து காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி வருகிறார். பிரதமராக ஆன உடன், இம்ரான் கான், ‘இந்தியாவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்க தயாராக இருக்கிறோம்' என்றார். இதற்கு இந்தியாவும் சம்மதம் தெரிவித்த நிலையில், இரு நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் நேரில் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தீவிரவாதிகளுக்கு புகழாரம் சூட்டும் வகையிலும், காஷ்மீரில் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாகவும் இந்தியா, பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தையிலிருந்து பின் வாங்கியது.