This Article is From Apr 09, 2020

கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை: எச்சரிக்கும் ராமதாஸ்

கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் மட்டும் தான் கிடைத்தன. ஆனால், இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது.

கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை: எச்சரிக்கும் ராமதாஸ்

கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை: எச்சரிக்கும் ராமதாஸ்

ஹைலைட்ஸ்

  • கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை
  • தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன.
  • நேற்று வரை 6,095 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் கொரோனா தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு என்பது பொதுமக்களை தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடு தான். இது நோய்ப்பரவலை தடுத்திருக்கிறது என்றாலும் கூட கொரோனா வைரஸ் நோயை முற்றிலுமாக ஒழித்துவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 738 பேர் உட்பட இந்தியா முழுவதும் 5,610 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது, "கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஊரடங்கு ஆணை எதிர்பார்த்த அளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் குறிப்பிடத்தக்க அளவில் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில் கொரோனா ஆபத்திலிருந்து இந்தியா முற்றிலுமாக விடுபடவில்லை என்ற உண்மையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் கொரோனா தடுப்பு உத்திகளை வகுத்து செயல்படுத்த வேண்டிய தருணம் வந்திருக்கிறது.

மக்களை ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளாமல் தனிமைப்படுத்தி வைத்து, அதன் மூலம் கொரோனா வைரஸ் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், இதை மட்டுமே வைத்துக் கொண்டு கொரோனாவை ஒழித்து விட்டதாக நிம்மதியடைய முடியாது.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் நோய்ப்பரவல் பல மடங்கு குறைவாகும். இது தான் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவுக்கு நடந்த நன்மையாகும்.

மற்றபடி, கொரோனா பரவல் ஆபத்து அப்படியே தான் உள்ளது. காட்டாற்றை அணை போட்டு தடுத்து வைப்பதும், எரிமலையின் வாயை மூடி வைப்பதும் எப்படியோ, அது போன்றது தான் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்பட்டதும் ஆகும். அணையை திறந்து விட்டால் எத்தகைய அழிவு ஏற்படுமோ, எரிமலை வாய் திறந்தால் எத்தகைய பேரழிவு ஏற்படுமோ, அதை விட மோசமான பேரழிவு கொரோனாவை ஒழிக்காமல் ஊரடங்கை விலக்கினால் ஏற்படும்.

கொரோனாவை கட்டுப்படுத்தி விட்டு, ஊரடங்கை விலக்கினால் மட்டும் தான் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். அது தான் முழுமையான வெற்றியாக இருக்கும்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி 70 நாட்களாகி விட்டன. ஆனால், நேற்று வரை 6,095 சோதனைகள் மட்டும் தான் செய்யப்பட்டுள்ளன. ஒரு நாளைக்கு சராசரியாக 87 சோதனைகள் மட்டும் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கு ஒரு லட்சம் சோதனைக் கருவிகள் மட்டும் தான் கிடைத்தன. ஆனால், இப்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்குழு 10 லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகளை வாங்கியுள்ளது.

தமிழகத்திலுள்ள 20 சோதனை மையங்களில் ஒரு நாளைக்கு ஒரு பணி வேளை மட்டும் பணியாற்றினால் 1,300 மாதிரிகளையும், இரு பணி வேளைகள் பணியாற்றினால் 2,500 மாதிரிகளையும் ஆய்வு செய்ய முடியும். இவை தவிர இரத்த மாதிரி சோதனைக்கான ஒரு லட்சம் கருவிகளை தமிழக அரசு வாங்கியுள்ளது. 

எனவே, தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளை உடனடியாக அதிகரிக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம், நீட்டிக்கப்படவிருக்கும் ஊரடங்கு முடிவடைவதற்குள் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்தி, கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக மாற்றி விட முடியும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

.