கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு தூக்கு தண்டனை விதித்தது
New Delhi: இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு தூக்குத் தண்டனை வழங்கியதை தடை செய்ய கோரிய வழக்கு இன்று சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்திய தரப்பு, ‘பாகிஸ்தான், இந்த நீதிமன்றத்தை பிரசாரத்துக்காக பயன்படுத்துகிறது' என்று கடுமையாக சாடியது. குல்பூஷனை, பாகிஸ்தான் தரப்பு ஒரு உளவாளி என்று குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவுக்கு ‘தீவிரவாத செயல்களில் ஈடுபட்டது. உளவு பார்த்தது உள்ளிட்ட குற்றங்களை புரிந்ததற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது' என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்திய அரசு, இந்த தீர்ப்புக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டது. மேலும் இந்திய தரப்பு, ‘சர்வதேச நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பு வழங்ப்படும் வரை, தூக்குத் தண்டனை உத்தரவு நிறுத்திவைக்கப்பட வேண்டும்' என்றும் கூறியது.
இந்நிலையில் இன்று இந்திய தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, ‘பாகிஸ்தான் தரப்பு, குல்பூஷன் வழக்கைப் பொறுத்தவரை மிகவும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கதயை கட்டமைத்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம், முறையான விசாரணையை மேற்கொள்ளவில்லை. எனவே, அவரை சிறையில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது' என்று வாதிட்டார்.
இந்திய தரப்பு, ஜாதவ் ஒரு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி. அவர் ஈரானில் வியாபாரம் செய்து வந்தார். அங்கிருந்து அவர் கடத்தப்பட்டார் என்று சொல்கிறது.
ஆனால் பாகிஸ்தான் தரப்போ, தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பாலோசிஸ்தான் மாகாணத்திலிருந்து கடந்த 2016, மார்ச் 3 ஆம் தேதி குல்பூஷனை கைது செய்தோம் என்கிறது.
இதையடுத்து கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம், குல்பூஷனை அவரது வழக்கறிஞர் பார்க்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதை பாகிஸ்தான் இதுவரை மதிக்கவில்லை. ‘உளவாளிகளுக்கு' அப்படியெல்லாம் சலுகை கொடுக்க முடியாது என்று மறுப்புக்குக் காரணம் சொன்னது பாகிஸ்தான்.
அதேபோல, குல்பூஷனின் தாய்க்கு மனிதாபிமான அடிப்படையில் விசா வழங்க வேண்டும் என்று இந்திய வைத்த கோரிக்கையையும் பாகிஸ்தான் மறுத்துவிட்டது.