This Article is From Mar 24, 2020

'கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது' : மோடிக்கு ராமதாஸ் பாராட்டு!!

கொரோனா குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கப்பட்டிருக்கும். இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதைவிட இந்திய மக்களின் உயிர் எனக்கு முக்கியம் என்று கூறியிருந்தார்.

'கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது' : மோடிக்கு ராமதாஸ் பாராட்டு!!

மோடியின் அறிவிப்பை பல்வேறு அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

ஹைலைட்ஸ்

  • 21 நாட்களுக்கு இந்தியா ஊரடங்கை எதிர்கொள்ளும் என்று பிரதமர் அறிவிப்பு
  • பிரதமரின் அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டு
  • கொரோனாவை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ராமதாஸ் கருத்து

கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது என்று, பிரதமர் மோடியின் 3 வாரகால ஊரடங்கை பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது-

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்குக் கடுமையான ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க இது தான் சரியான நடவடிக்கையாக இருக்கும்!

நாடு முழுவதும் 3 வாரங்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விடாமல் தொடர்ந்து வலியுறுத்தினோம்; இதைத்தான் தொடர்ந்து வலியுறுத்தினோம் அதைத்தான் பிரதமர் அறிவித்திருக்கிறார். இது மிகுந்த நிம்மதியளிக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

நாடு முழுவதும் 21 நாட்களுக்கான ஊரடங்கு ஆணையைத் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் தீவிரமாகவும், கடுமையாகவும் செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள் ஊரடங்கைப் பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட வேண்டும்!

இவ்வாறு  ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நாட்டு மக்களுக்கு கொரோனா குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இன்று நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் முடக்கப்பட்டிருக்கும். இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் அதைவிட இந்திய மக்களின் உயிர் எனக்கு முக்கியம்.

இந்த 21 நாட்களைச் சமாளிக்காவிட்டால் நாம் பேரிழப்பை எதிர்கொள்வோம். இன்னும் 21 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல நேரிடும் என்று கூறியிருந்தார். மோடியின் நடவடிக்கையை பல்வேறு அரசியல் தலைவர்கள் பாராட்டி வருகின்றனர். 

.