This Article is From Jun 07, 2020

கொரோனா பாதித்த உலக நாடுகள் வரிசையில் 5வது இடத்தில் இந்தியா!

நேற்று இரவு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.44 லட்சத்தினை கடந்துள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினை பின்னுக்குத்தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்டிரா அதிக அளவு தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் உள்ளது

New Delhi:

நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை காரணமாக இந்தியா தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் வரிசையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக ஐந்தாவது இடத்தில் ஸ்பெயின் 2,40,978 நோயாளிகள் எண்ணிகையுடன் இருந்தது. நேற்று இரவு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 2.44 லட்சத்தினை கடந்துள்ளது. இதன் காரணமாக ஸ்பெயினை பின்னுக்குத்தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

தற்போது முதல் இடத்தில் அமெரிக்கா, அதைத்தொடர்ந்து பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகள் உலக அளவில் முதல் நான்கு இடத்தில் உள்ளன. நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 9,887 ஆக அதிகரித்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 294 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. இதன் மூலமாக ஒட்டு மொத்த உயிரிழப்பு 6,642 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதமானது 48.27 ஆக இருந்தது. ஆனால், சனிக்கிழமை இந்த மீட்பு விகிதத்தில் சிறிய அளவு சரிவு ஏற்பட்டு 48.20 ஆக சரிந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி இந்தியா இத்தாலியை விட அதிக எண்ணிக்கையில் கொரோன தொற்று நோயளிகளை பதிவு செய்திருந்தது.  அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி இத்தாலியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,34,531 ஆக இருந்தது. இந்தியாவில் இந்த எண்ணிக்கையானது 2,35,769 ஆக உயர்ந்திருந்தது.

இந்தியாவில் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது தொடர்ந்து உயர்ந்து வந்திருந்தாலும், தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நாளொன்று 8,000 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா,டெல்லி, குஜராத், தமிழகம் போன்ற மாநிலங்கள் இது வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்று நோயாளிகளை கொண்டுள்ளது. உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் 10 ஆயிரத்தினை நெருங்குகின்றன.

தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் முதல் இடத்தில் மகாராஷ்டிராவும், தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. தற்போது அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வரும் மாநிலங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிக அளவு உயிரிழந்தோரின் பட்டியலில் மாகராஷ்டிராவையடுத்து குஜராத் இரண்டாம் இடத்தில் உள்ளது.

நேற்றைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 2,739 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 120 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 82,968 ஆக அதிகரித்துள்ளது.

.