This Article is From Dec 21, 2019

குடியுரிமை சட்ட விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தெரிவித்த மலேசிய பிரதமருக்கு மத்திய அரசு பதிலடி

மத்திய வெளியுறவு அமைச்சகம் குடியுரிமை சட்டம் தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 'இந்திய குடிமக்களின் குடியுரிமையை குடியுரிமை சட்ட திருத்தம் பறிக்காது. முற்றிலும் தவறான கருத்துக்களை மலேசிய பிரதமர் கூறுகிறார்' என்று கூறப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்ட விவகாரத்தில் சர்ச்சை கருத்தை தெரிவித்த மலேசிய பிரதமருக்கு மத்திய அரசு பதிலடி

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக மலேசிய பிரதமர் கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஹைலைட்ஸ்

  • குடியுரிமை சட்டவிவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்கிறது மத்தியஅரசு
  • நேற்று மலேசிய அதிபர் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது
  • CAA-ன் அவசியம் என்ன என்ற மலேசிய பிரதமர் கேள்வி எழுப்பிருந்தார்
New Delhi:

குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக நேற்று மலேசிய பிரதமர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், அவருக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. மலேசிய பிரதமர் மகாதிர் முகம்மது கூறியது முற்றிலும் தவறான தகவல் என்று வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் குறித்து மலேசிய பிரதமர் கருத்து கூறியுள்ளார். வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் மத ரீதியாக அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படுகிறது. 

குடியுரிமை சட்ட திருத்தம் எந்தவொரு இந்தியனின்  குடியுரிமையையும் மதத்தின் அடிப்படையில் பறிக்காது. மலேசிய பிரதமர் இந்த விவகாரம் குறித்து தெரிவித்த கருத்து முற்றிலும் தவறானது. உண்மையை புரிந்து கொள்ளாமல் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று மலேசியாவை நாங்கள் வலியுறுத்துகிறோம்' என்று கூறப்பட்டுள்ளது. 

மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் நேற்று மாநாடு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகம்மது, 'கடந்த 70 ஆண்டுகளாக இந்தியர்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வரும் சூழலில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு என்ன தேவை இருக்கிறது. 

சில முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்கும் நிலையில் மதசார்பற்ற நாடு என்று இந்தியா தன்னை அறிவித்துக் கொள்வது வருத்தம் அளிக்கிறது. இந்தியா செய்யும் அதே காரியத்தை மலேசியாவில் செய்தால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது. குழப்பங்களும், நிலையற்ற தன்மையும்தான் ஏற்படும். இதனால் எல்லோரும் பாதிக்கப்படுவார்கள்.' என்று கூறியிருந்தார். 

இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அரசு, குடியுரிமை சட்ட திருத்த விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை என்றும், உண்மைகளை புரிந்து கொள்ளாமல் கருத்து தெரிவிப்பதை மலேசியா தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. 

இந்த மாதம் குடியுரிமை சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் கடந்த 12-ம்தேதி சட்டமாக்கப்பட்டது. 

.