ஐ.நா.வுக்கான இந்திய அதிகாரி விதிஷா மைத்ரா.
United Nations: ஐ.நா.சபை அறிவித்திருக்கும் தீவிரவாதிகளில் 130-க்கும் அதிகமானவர்கள் பாகிஸ்தானில் இருப்பதாக ஐ.நா.சபையில் இந்தியா பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானால் மறுக்க முடியுமா என்றும் இந்தியா கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஐ.நா.சபையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தீவிரவாதம் என்பது சர்வதேச அளவில் இருக்கும் முக்கிய பிரச்னை என்றார். இதனை உலக நாடுகள் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாமல் அந்நாட்டை மிகக்கடுமையாக விமர்சித்த மோடி, தீவிரவாதத்தை இந்தியா கோபத்துடனும், உறுதியுடனும் எதிர்த்து வருவதாக குறிப்பிட்டார்.
இதன்பின்னர் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அணு ஆயுதங்கள் தாங்கள் வைத்திருப்பதை சுட்டிக்காட் உரையாற்றினார். இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைக் கொண்டவை. இரு நாடுகளும் அணு ஆயுதங்களால் மோதிக்கொண்டால் அதனால் மற்ற நாடுகளுக்கு ஏற்படும் விளைவுகளை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று இம்ரான் கான் பேசினார்.
இதற்கு இந்தியா தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் முதன்மை செயலர் விதிஷா மைத்ரா ஐ.நா.வில் பேசியதாவது-
அணு ஆயுதங்களால் போரிட்டால் அதன் விளைவுகள் என்ன ஆகும் என்று இம்ரான் கான் மிரட்டும் தொனியில் பேசுகிறார். இதனை ராஜதந்திரம் என்று சொல்ல முடியாது. போரில் ஈடுபடாமல் தப்பிக்கும் தந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
ஐ.நா. அறிவித்த தீவிரவாதிகளில் 130 பேர் பாகிஸ்தானில் இருக்கின்றனர். இதனை இம்ரான் கானால் மறுக்க முடியுமா?
இவ்வாறு விதிஷா பேசினார்.