இந்தியா - சீனா இடையே 1962-ம் ஆண்டில் போர் நடைபெற்றது. கடந்த 2017-ல் கிழக்கு இமாலய பகுதியில் அமைந்துள்ள டோக்லாமில் இரு தரப்பு படைகளுக்கும் இடையே மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இரு நாட்டு படைகளும் 3 மாதங்கள் முற்றுகையிட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லடாக் பகுதியில் மீண்டும் எல்லைப் பிரச்னை வெடித்திருக்கிறது. லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த மாதம் முதல் வாரத்தில் கைகலப்பும், மோதலும் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையை தூதரக ரீதியிலும், ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லடாக்கில் இரு தரப்பும் படைக்குவிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. எல்லையில் அமைந்திருக்கும் சிறிய கிராமமான சுஷுல் - மோல்டோவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், இந்தியா சார்பாக லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் உள்பட 14 அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் இந்தியா - சீனா இடையிலான எல்லை பிரச்னையை தூதரக ரீதியிலும், ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தை மூலமாகவும் தீர்த்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சுவாரத்தையில் எடுக்கப்பட்ட முடிவுகள் இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்த தகவலை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது. “எல்லைப் பிரச்னையை பேச்சு வாரத்தை மற்றும் ஒப்பந்தங்கள் மூலமாக தீர்வு காண்பதற்கும், எல்லைப் பகுதிகளில் இயல்பு நிலை திரும்புவதற்கும் இரு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஒற்றுமையானது இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் இன்றியமையாததாகும்.“ என வெளியுறவுத்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், இரு நாடுகளுக்கிடையே இராஜதந்திர உறவுகள் தோற்றுவிக்கப்பட்டு ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த உறவின் வளர்ச்சிக்கு இரு நாடுகளும் பங்களிக்கும் என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
மே 5 மற்றும் மே 6 ஆகிய தேதிகளில் பங்கோங் ஏரி பிராந்தியத்தில் இரு தரப்பு வீரர்களிடையே மோதல்கள் நடந்ததாக அறிக்கைகள் வந்தபோது இரு நாடுகளுக்கிடையேயான பதற்றம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.