அணுசக்தி, எரிசக்தி, ரயில்வே, உரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
New Delhi: உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாக கருதப்படும் எஸ். 400 ரக ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா பெறவுள்ளது. இதற்காக ரூ. 37 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் கையெழுத்திட்டுள்ளனர். எஸ். 400 ரக ஏவுகணை தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் சக்தி கொண்டது. இதனை தவிர்த்து, விண்வெளி, அணுசக்தி, எரிசக்தி, ரயில்வே, உரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்தியா - ரஷ்யா ஒப்பந்தம் தொடர்பான தகவல்கள்
1. விரைவாக மாறி வரும் உலகில் ரஷ்யாவிடனான உறவும் வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
2. அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
3. இந்த ஒப்பந்தத்தின்படி அடுத்த 24 மாதங்களில் எஸ் - 400 ஏவுகணைகளை ரஷ்யா தயாரித்து இந்தியாவுக்கு வழங்கி விடும்.
4. முன்பு சீனாவுக்கு அதிக எண்ணிக்கையில் எஸ் - 400 ரக ஏவுகணைகளை ரஷ்யா வழங்கியுள்ளது.
5. சீனா ஆயுதத்தை பெருக்கி வருவதால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் இந்தியா மீது தடை ஏதும் விதிக்காது என்று மத்திய அரசு நம்புகிறது.
6. ரஷ்ய தரப்பு, இந்தியாவுக்கு வருவதற்கு முன்னர், ’20-க்கும் மேற்பட்ட ராணுவ ஒப்பந்தங்களை இந்தியா இறுதி செய்யும்’ என்று கூறியுள்ளது.
7. கிரிவாக்-க்ளாஸ் ப்ரிகேட்ஸ் ரக ஆயுதங்களையும் ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கும் என்று கூறப்படகிறது.
8. ரஷ்யா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மட்டும் தான், இந்தியா வருடாந்திர சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கிறது.
9. இந்த ஆண்டு பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் இடையில் நடக்கும் மூன்றாவது சந்திப்பு இது. இதற்கு முன்னர் ரஷ்யாவின் சோச்சியிலும், பிரிக்ஸ் மாநாட்டிலும் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துக் கொண்டனர்.
10. அமெரிக்காவின் எச்சரிக்கை குறித்து இந்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாரமானிடம் கேட்டபோது, ‘மற்ற நாடுகளுடனான உறவைப் பொறுத்தவரை இந்தியா, தனது இறையாண்மையை இழக்காத வகையில் தான் செயல்பட்டு வருகிறது. அது அப்படியே தொடரும்’ என்று கூறியுள்ளார்.