This Article is From Nov 22, 2019

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் இந்தியா! அதிர்ச்சி தகவல்!!

வெளியேற்றப்படும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளில் 60 சதவீதம் மட்டுமே சேகரிக்கப்படுவதாகவும், மீதமுள்ள 40 சதவீத கழிவுகள் வெவ்வேறு இடங்களில் கொட்டப்பட்டு சுற்றுச்சூழலை பாதிப்படைய செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை வெளியேற்றும் இந்தியா! அதிர்ச்சி தகவல்!!

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை 2022-க்குள் முடிவுக்கு கொண்டுவர மத்திய திட்டமிட்டுள்ளது.

New Delhi:

நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பிளாஸ்டிக் கழிவுகள் எவ்வளவு வெளியேற்றப்படுகிறது, அதனை மறு சுழற்சி செய்யும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதில் அளித்துள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது- 

நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், அதன் உற்பத்தியும், பயன்பாடும் மக்கள் மத்தியில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. இது குப்பை மேலாண்மைக்கு மிகுந்த சவாலை ஏற்படுத்தியுள்ளது. 

குறைந்த விலை, தரம், வலிமை உள்ளிட்ட காரணங்களுக்காக தொழிற்சாலைகள் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு தேர்வு செய்கின்றன. இருப்பினும், பிளாஸ்டிக் கழிவுகளை மேலாண்மை செய்வதற்கான பணிகளை சுற்றுச் சூழல் அமைச்சகம் தொடங்கி விட்டது. 

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு மட்டும் 25 ஆயிரத்து 940 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. 60 முக்கிய நகரங்களில் மட்டும் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. 

நாட்டில் மொத்தம் 4,773 பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி, மறு சுழற்சி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. வெளியேற்றப்படும் கழிவுகளில் 60 சதவீதம் அதாவது 15 ஆயிரத்து 384 டன் கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறு சுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள 40 சதவீதமான 10 ஆயிரத்து 556 சதவீத கழிவுகள் குப்பைகளாக அங்கே, இங்கே கொட்டப்பட்டுகின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. 

மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக வல்லுனர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள், ஒட்டுமொத்த பிளாஸ்டிக்கையும் மறு சுழற்சி செய்வது, அவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். 
இவ்வாறு அவர் தெரிவித்தார். 

2022-ம் ஆண்டுக்குள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் இலக்காக உள்ளது. 

.