2 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்தை ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி
Vladivostok: இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடல் வழிப் போக்குவரத்து இருக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி சென்னை துறைமுகத்திலிருந்து விலாடிவோஸ்டாக் துறைமுகத்துக்கு கடல் வழிப் பயணம் சாத்தியமாக உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுக்குப் பயணம் செய்து அந்நாட்டு அதிபரான விளாதிமிர் புதினை சந்தித்துப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதில் ஒரு பகுதியாகத்தான், சென்னை - விலாடிவோஸ்டாக் இடையிலான கடல் வழி ரூட் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறையின் செயலர் விஜய் கோகலே, “சென்னைக்கும் விலாடிவோஸ்டாகிற்கும் இடையில் கடல் வழி ரூட் திறப்பதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பு மேலும் அதிகரிக்கும்.
ரஷ்யாவின் மின்சாரத் துறையில் மட்டும் இந்தியா கவனத்தில் கொள்ளவில்லை, மாறாக வனத் துறை வேளாண் துறைகளையும் உற்று நோக்கும். சென்னை - விலாடிவோஸ்டாக் கடல் வழித் தடத்தைப் பொறுத்தவரை ரஷ்யாவுக்கு ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அதற்கும் இந்தியா உதவும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
2 நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணத்தை ரஷ்யாவுக்கு மேற்கொண்டுள்ளார் பிரதமர் மோடி. இந்த பயணத்தின்போது, கிழக்கு பொருளாதார ஃபோரம் சந்திப்பிலும் மோடி கலந்து கொள்கிறார்.
இந்த சந்திப்பின்போது இரு நாட்டுக்கும் இடையிலான நட்புறவு, வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, அணு சக்தி, ராணுவம், விண்வெளி மற்றும் கடல்சார் போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.