ஹைலைட்ஸ்
- 2016 முதல் மல்லையா இங்கிலாந்தில் வசித்து வருகிறார்
- இரு நாட்டுக்கும் இடையில் நிலவும் விசா சிக்கல் குறித்தும் பேசப்பட்டுள்ளது
- மல்லையா மீது ரூ.9,000 கோடி மோசடி செய்ததாக புகார் உள்ளது
New Delhi: இந்தியா- இங்கிலாந்து நாடுகளின் உள்துறை அமைச்சகங்களுக்கு மத்தியில் நடந்த கூட்டத்தின் போது விஜய் மல்லையா மற்றும் நிரவ் மோடி உள்ளிட்டவர்களை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கு உதவி புரியுமாறு இங்கிலாந்துக்கு வலியுறத்தப்பட்டு உள்ளது.
விஜய் மல்லையா, கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ம் மாதம் 2 ஆம் தேதி, இந்தியாவிலிருந்து தப்பிச் சென்றார். அவர் மீது 9,000 கோடி ரூபாய் பண மோசடி செய்துள்ளதாக புகார் உள்ளது. இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற மல்லையா, இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்தார். அவரை ஸ்காட்லாந்து போலீஸ் கைது செய்தது. ஆனால், அவர் பிணையில் வெளியே வந்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் தன் விடுதலைக்காக வழக்கு நடத்திக் கொண்டிருக்கிறார்.
அதே போல, குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபரான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக புகார் உள்ளது. அவரும் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதைப் போலவே ஐபிஎல் அமைப்பின் முன்னாள் தலைவர் லலித் மோடி மீதும் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அவரும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதைப் போன்று இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் வேறு சிலரும் இந்திய அரசால் தேடப்பட்டு வரும் நபர்களாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு, இரு நாட்டுக்கும் இடையில் நடந்த கூட்டத்தின் போது வலியுறத்தப்பட்டு உள்ளது.
மேலும், இங்கிலாந்து வருவதற்கு இந்தியர்கள் பலர் விசாவுக்கு விண்ணப்பித்தும், அவர்களுக்கான ஒப்புதலில் தாமதம் நிலவி வருவதையும் அந்நாட்டிடம் இந்தியத் தரப்பு சுட்டிக்காட்டி உள்ளது. இதற்கு கூடிய சீக்கிரம் தீர்வு காணுமாரும் இங்கிலாந்துக்கு, இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த சந்திப்பு குறித்து இந்திய தரப்பு, `இங்கிலாந்து அரசிடம் இருந்து நம் நாட்டில் தேடப்பட்டு வரும் நபர்களை திரும்ப அளிப்பதில் அரசாங்க ரீதியில் உதவி கேட்கப்பட்டு உள்ளது. விஜய் மல்லையா போன்றவர்களை மீண்டும் சட்டத்திற்கு முன் நிற்க வைக்க அனைத்து வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது' என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.