90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் 2வது போயிங் 747 ரக சரக்கு விமானம் இந்தியாவில் இருந்து பெல்கிரேடிற்கு தரையிரங்கியது.
ஹைலைட்ஸ்
- பாதுகாப்பு உபகரணங்களை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்த இந்தியா
- உள்நாட்டில் கடும் தட்டுபாடு நிலவும் நிலையில் பெரும் சர்ச்சை
- செர்பிய ட்வீட்டர் பதிவிற்குப் பிறகே இந்த விஷயம் வெளியில் வந்தது
New Delhi: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு கூட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத அளவு தட்டுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை இந்தியா, செர்பியா நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு ஆதரவை வழங்கும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) செர்பிய பிரிவின் ட்வீட்டர் பதிவிற்குப் பிறகே இந்த விஷயம் வெளியில் தெரியவந்துள்ளது. எனினும், இந்திய சுகாதார அமைச்சகம் இதனை மறுத்துள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் செர்பியா பிரிவு (UNDP) தனது ட்வீட்டர் பதிவில் கூறியதாவது, 90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் 2வது போயிங் 747 ரக சரக்கு விமானம் இந்தியாவில் இருந்து பெல்கிரேடிற்கு தரையிறங்கியது.
செர்பியா அரசு வாங்கிய இந்த மதிப்புமிக்க பொருட்களின் போக்குவரத்துக்கு ஐரோப்பிய ஒன்றியமே முழுமையாக நிதியளித்தது. அதேநேரத்தில், ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் செர்பியா பிரிவு விமானத்தை ஏற்பாடு செய்து, விரைவான விநியோகத்தையும் உறுதி செய்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 90 டன் சரக்குகளில் 50 டன் அறுவை சிகிச்சை கையுறைகள் உள்ளது. அதைத்தவிர, முகக்கவசங்கள் மற்றும் முழு உடல் பாதுகாப்பு ஆடைகள் உள்ளது, அவை மருத்துவ ஊழியர்களுக்கு மிகவும் தேவையானது.
இதுதொடர்பாக கொச்சி விமான நிலையத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, மார்ச் 29ம் தேதி மற்றொரு சரக்கு விமானம் அனுப்பப்பட்டது. அதில், 35 லட்சம் அறுவை சிகிச்சை கையுறைகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே 30 டன் சரக்கு பெல்கிரேடிற்கு டிரான்ஸ்வியாஎக்ஸ்போர்ட் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு கொச்சின் சுங்கத்துறை அனுமதி ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளது. அதுகுறித்தும் ட்வீட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக இணைச் செயலாளர் லுவ் அகர்வாலிடம் கேள்வி எழுப்பியபோது, இது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் தளவாடங்களை உருவாக்குவதும், பிற நாடுகளிலிருந்து பொருட்களை பெறுவதிலுமே நாங்கள் முயற்சித்து வருகிறோம். செர்பியா விவகாரம் குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை என்று அவர் கூறினார்.
எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததாக நாடு முழுவதும் 100 மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில், ஒரு சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் கொரோனா தொற்று சிகிச்சை மையமான புகழ்பெற்ற கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள், அங்குள்ள மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட பின்னரும், சிறப்பு பாதுகாப்பு உபகரணங்கள் கோரிய வெளி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தால் மருத்துவர்கள் ரெயின்கோட், இருசக்கர வாகன ஹெல்மெட்டை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக, நேற்று முன்தினம், உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம், தங்களுக்கான இரண்டு மாத சம்பளம் வழங்காததை கண்டித்தும், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காததை கண்டித்தும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.
தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக உள்நாட்டிலும், தென்கொரியா மற்றும் சீனாவிலும் இதுபோன்ற உபகரணங்களை மொத்தமாக வாங்க முயற்சிப்பதாக மத்திய அரசு நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.