முன்னதாக ஐநா சபையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி பேசினார்
Geneva: ஜம்மூ காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் அங்கு நிலவும் சூழல் குறித்தும் சர்வதேச மன்றங்களில் பிரச்னை எழுப்ப பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது. இதுவரை அதன் முயற்சியில் எந்தவித வெற்றியும் கிடைக்காத நிலையில், இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் சந்திப்பில் மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்துப் பேசியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய தரப்பு, “துடுக்குத்தனமான பேச்சு, தவறான குற்றச்சாட்டுகள் காஷ்மீர் விவகாரத்தில் முன்வைக்கப்பட்டுகிறது” என்று பாகிஸ்தானை தாக்கியது.
இந்திய தரப்பு மேலும், “ஜம்மூ காஷ்மீர் என்பது இந்தியாவின் உள்விவகாரம் ஆகும். காஷ்மீருக்கு மட்டும் காட்டப்பட்டு வந்த பாரபட்சம் நீக்கப்பட வேண்டும் என்பது நாடாளுமன்ற முடிவாகும். ஆனால் இந்த விவகாரத்தைப் பற்றி பொய் சொல்லும் தரப்புதான் (பாகிஸ்தானின் பெயரைச் சொல்லாமல்), தீவிரவாதத்தின் மையமாக இருக்கிறது என்பது இந்த உலகு அறியும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அந்த நாடு தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது” என்று விளக்கமாக பதிலடி கொடுத்தது.
முன்னதாக ஐநா சபையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி, “தென்கிழக்கு ஆசியாவே, காஷ்மீர் விவகாரத்தால் மிகவும் பதற்றமான சூழலில் இருக்கிறது” எனப் பேசினார்.
ஜம்மூ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை அடுத்து பாகிஸ்தான், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான உரசல் போக்கு அதிகரித்தது.
இது குறித்து சென்ற மாதம் பாகிஸ்தான், ஐநா சபைக்குக் கடிதம் எழுதியது. அதில், “ஜம்மூ காஷ்மீரில் மனித உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது. அதற்கு இந்தியா, “பாகிஸ்தான் எழுதியது அந்த கடிதம் எழுத பயன்படுத்தப்பட்ட பேப்பருக்குக் கூட ஒப்பானது அல்ல” என பதிலடி கொடுத்தது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் கூட்டத்திலும் இந்தப் பிரச்னையைப் பாகிஸ்தான் எடுத்துச் சென்றது. அந்தக் கூட்டத்திலும் சீனாவைத் தவிர்த்து மற்ற எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.