அரசின் தடை உத்தரவுக்கு முன்னரே, சில மாநிலங்கள் தானாக முன் வந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன. (ராய்டர்ஸ்)
ஹைலைட்ஸ்
- 2022 ஆம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நடவடிக்கை
- பிளாஸ்டிக் மாசுக்களால் தொடர்ந்து பிரச்னை அதிகரித்து வருகிறது
- ஐரோப்பிய ஒன்றியம் 2021-க்குள் பிளாஸ்டிக்கிற்குத் தடை விதக்க உள்ளது
NEW DELHI: மத்திய அரசு, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பை, கப் மற்றும் ஸ்ட்ராக்களுக்குத் தடை விதிக்கும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். உலகில் அதிக மாசுவை ஏற்படுத்தும் பொருட்களான இவற்றைத் தடை செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறதாம்.
2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்று திட்டம் போடுகிறாராம் பிரதமர் நரேந்திர மோடி. அதன் தொடக்கமாக அக்டோபர் 2 ஆம் தேதி, 6 பொருட்களுக்குத் தடை விதிக்கப்படுமாம்.
பிளாஸ்டிக் பை, கப், பிளேட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், சில சிறிய பிளாஸ்டிக் சாஷே பைகள் உள்ளிட்டவை இந்தத் தடை உத்தரவில் அடங்கும் என்று நம்மிடம் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
“இந்தத் தடையானது, அந்த 6 பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதியைத் தடுக்கும் வகையில் இருக்கும்” என்று ஒரு அதிகாரி கூறினார்.
இந்தத் தடை உத்தரவை சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் முன்னெடுக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய மின்னஞ்சலுக்கு, அமைச்சகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி, பிரதமர் மோடி ஆற்றிய சுதந்திர உரையின்போதும், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் ஒழிப்புக் குறித்துப் பேசினார். அப்போதே அவர், அக்டோபர் 2 ஆம் தேதி மிகப் பெரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சூசகமாக சொன்னார்.
உலக அளவில், ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களாக் ஏற்படும் மாசுக்களால் நாளுக்கு நாள் பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 50 சதவிகிதம் கடலில் சென்று சேர்கின்றன. இதனால், கடல் உயிரினங்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன. கடல் உயிரினங்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் அது பெரும் பாதிப்பை உண்டு செய்வதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் சொல்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் வரும் 2021 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்க உள்ளது.
இப்போது தடை செய்யப்பட உள்ள பிளாஸ்டிக் பொருட்கள் மூலம், நாட்டில் 5 முதல் 10 சதவிகிதம் வரையிலான பிளாஸ்டிக் மாசு குறைக்கப்படும் என்று கூறும் அதிகாரி,
தொடர்ந்து, தடைக்குப் பிறகும் பயன்படுத்துவோர்க்கு முதல் 6 மாதம் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். தொடர்ந்து பயன்படுத்துவோர்க்கு அபராதம் விதிக்கப்படும் என்கிறார்.
அரசின் தடை உத்தரவுக்கு முன்னரே, சில மாநிலங்கள் தானாக முன் வந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளன. மேலும், இனி பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டாலும், அவை மறுசுழற்சி செய்யும் வகையில் இருக்கும்படி விதிமுறைகளை மாற்றியமைக்கப்படுமாம்.
குறிப்பாக இணைய வர்த்தக நிறுவனங்கள், அவர்கள் பேக்கேஜிங்கிற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கச் சொல்லியும் அறிவுறுத்தப்பட உள்ளதாம். அந்த நிறுவனங்கள் கிட்டத்தக்க 40 சதவிகித பிளாஸ்டிக் மாசுக்கு வித்திடுகிறார்களாம்.