மூன்றாம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கவாஜா 41 ரன்களுடனும், கேப்டன் பெய்ன் 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 175 ரன்கள் முன்னிலையில் இருந்த ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.
நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்துள்ளது. விக்கெட்டுகளை இழக்காமல் தாக்குபிடித்து ஆஸ்திரேலிய அணி மிகவும் மெதுவாக ஆடி ரன்களை சேர்த்து வருகிறது. கவாஜா பொறுமையாக ஆடி அரைசதமடித்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் கவாஜா 67 ரன்களுடனும், பெய்ன் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் ஷமி 2 விக்கெட்டுகளையும், இஷாந்த், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்துயுள்ளனர்.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. காயத்தால் வெளியேறிய பின்ச் திரும்ப ஆடவருவது குறித்த விவரங்கள் ஏதும் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
நான்காம் நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் குவித்திருந்த நிலையில் உணவு இடைவேளைக்கு பின் முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. முதலில் டிம் பெய்ன் வெளியேற, அடுத்த பந்தில் நேற்று காயம் காரணமாக வெளியேறிய பின்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் ஷமி வீழ்த்தினார்.
அடுத்த சில நிமிடங்களில் சிறப்பாக ஆடி வந்த கவாஜா 72 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் வெளியேறினார். அடுத்து கம்மின்ஸ் பும்ராஹ் பந்திலும், லயன் ஷமி பந்திலும் வெளியேறினர். 207 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஹேசல்வுட் கொஞ்சம் தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். கடைசியாக ஸ்டார்க் பும்ராஹ் பந்தில் வெளியேற ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்திய தரப்பில் ஷமி 6 விக்கெட்டுகளையும், பும்ராஹ் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்தியா முதல் ஓவரின் 4வது பந்திலேயே ஸ்டார்க் பந்தில் போல்டாகி ராகுலை இழந்தது. நான்காவது ஓவரில் புஜாரா ஹேசல்வுட் பந்தில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்க இந்தியா சரிவை சந்தித்தது.
தேநீர் இடைவேளையின் போது இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்துள்ளது. விஜய் 6 ரன்னுடனும் கோலி ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர். ஸ்டார்க், ஹேசல்வுட் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 272 ரன்கள் தேவை.
தேநீர் இடைவேளையின் போது 2 விக்கெட்டுகளை இழந்து 15 ரன்கள் எடுத்திருந்த இந்தியா, தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விஜய் 20 ரன்னிலும், கோலி 17 ரன்னிலும், ரஹானே 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
டாப் ஆர்டரின் மோசமான ஆட்டத்தால் 5 விக்கெட்டுகளை 100 ரன்களுக்குள் இழந்தது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த இந்தியா தோல்வியை நோக்கி செல்கிறது.
ஆட்ட நேர இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் குவித்துள்ளது. விஹாரி 24 ரன்களுடனும், பண்ட் 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி தரப்பில் லயன், ஹேசல்வுட் தலா 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இந்தியா வெற்றி பெற 5 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில் இன்னும் 175 ரன்கள் குவிக்க வேண்டும்.