முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்தை துவங்கியது ஆஸ்திரேலியா. இந்திய வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
நேற்றைய ஸ்கோராக 16 ரன்களுடன் ஆட்டத்தை துவங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 326 ரன்கள் குவித்தது.
இந்திய தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளையும், பும்ராஹ், உமேஷ் விஹாரி தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட், பின்ச் , மார்க்ஸ் அரை சதமடித்தனர். வலுவான தொடக்கத்தை தந்த ஆஸ்திரேலிய அணியால் இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாததால் 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முன்னதாக நேற்று டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இந்திய அணி காயத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும், முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடமட்டார்கள் என அணி நிர்வாகம் அறிவித்தது. மேலும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம்பெறாத இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்னும் குணமடையாததால், இந்த டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.
முதல் டெஸ்ட்டை இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரண்டாம் நாள் தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் குவித்துள்ளது. உணவு இடைவேளைக்கு முன் களமிறங்கி 3 ஓவர்கள் மட்டுமே ஆடிய இந்திய அணி 6 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் டக் அவுட் ஆனார்.
உணவு இடவேளை முடிந்து ஆட்டத்தை துவங்கி இந்திய அணி 1 ரன் எடுத்த நிலையில் ராகுலை இழந்தது. இரு துவக்க வீரர்களும் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை இந்தத் தொடரில் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பின்னர் ஆடத்துவங்கிய கோலி, மற்றும் புஜாரா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி 37 ரன்களுடனும், புஜாரா 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். துவக்கத்தில் சறுக்கினாலும் பின்னர் இந்தியா சமாளித்து ஆடி வருகிறது. இந்தியா இன்னும் 256 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
தேநீர் இடைவேளையின் போது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் குவித்திருந்த இந்திய அணி தொடர்ந்து ஆட்டத்தை வெளிப்படுத்தியது. புஜாரா 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டார்க் பந்தில் பெய்னிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய துணை கேப்டன் ராஹானே, கேப்டன் கோலியுடன் இணைந்து பொறுப்பாக ஆடி ரன் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இருவரும் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தியா ஆட்ட நேர இறுதியில் 3 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் கோலி 82 ரன்களுடனும், ரஹானே 51 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆரம்பத்தில் 8 ரன்களுக்குள் 2 விக்கெட்டை இழந்து தடுமாறிய இந்தியா. கேப்டன் கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் ஆட்டநேர இறுதியில் சிறப்பான ஸ்கோரை எட்டியது. இன்னும் இந்தியா 154 ரன்கள் பின் தங்கியுள்ளது.