இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இரண்டாவது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்றது. டாஸில் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா துவக்க வீரர்களின் அபார ஆட்டத்தால் 326 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய இந்தியா கேப்டன் விராட் கோலியின் சதத்தால் 283 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
43 ரன்கள் முன்னிலையுடன் ஆடத்துவங்கிய ஆஸ்திரேலியா 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய வீரர் ஷமி அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஆடத்துவங்கிய இந்தியா 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம் அணியை தோல்விக்கு அழைத்து சென்றது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் குவித்திருந்தது இந்திய அணி. அணியின் வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை என்ற நிலையில், விஹாரி 28 ரன்னுக்கும், பன்ட் 30 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். கடைசி வரிசை வீரர்கள் உமேஷ் 2 ரன்னிலும், இஷாந்த், பும்ராஹ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆஸி வேகத்தில் சரிய இந்தியா 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 146 ரன்கள் வித்தியாசத்தில் பெர்த் டெஸ்ட்டில் தோல்வியை தழுவியது. ஆஸி தரப்பில் ஸ்டார்க், லயன் தலா 3 விக்கெட்டுகளையும், ஹேசல்வுட், கம்மின்ஸ் தலா 2 இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
முதல் டெஸ்ட்டை இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இப்போது 1-1 என்ற சமநிலையை எட்டியுள்ளது. ஆட்ட நாயகனாக இந்த போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாவது டெஸ்ட் வரும் 26ம் தேதி மெல்பெர்னில் துவங்குகிறது.