This Article is From Jan 09, 2019

இந்திய - ஆஸ்திரேலிய தொடரில் இதெல்லாம் இல்லை என்றால்தான் ஆச்சர்யம்!

தல கோலி... பேபிசிட்டர் பன்ட்... தற்காலிக பெய்ன்... ஆஸி தொடரில் நடந்த ஸ்லெட்ஜிங் பரிதாபங்கள்!

இந்திய - ஆஸ்திரேலிய தொடரில் இதெல்லாம் இல்லை என்றால்தான் ஆச்சர்யம்!

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என்றாலே பரபரப்புக்கும், வசைபாடுதலுக்கும் பஞ்சமே இருக்காது. களத்தில் ஆட்டத்தில் காட்டும் ஆக்ரோஷத்தை விட மைதானத்துக்குள் வீரர்களுக்கு நடுவே நடக்கும் உரையாடல்கள் இணையதளங்களில் விவாதிக்கப்படுமளவுக்கு வைரலாகும். ஸ்லெட்ஜிங் என்பது ஆஸ்திரேலியாவில் தவிர்க்க முடியாதது என்பது ஊரறிந்த விஷயம். 72 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக இந்தியா தொடரை வென்றுள்ளது. இந்தத் தொடரில் நடைபெற்ற ஸ்லெட்ஜிங் நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..

'தல' கோலி!

கோலி மற்றும் பெய்ன் இடையேயான வாதத்தில் முதலில் கோலி, பெய்னை வீழ்த்திவிட்டால் தொடரை 2-0 என முன்னிலை பெறலாம் என்று தெரிவித்தார். ``If he mess it up it's 2-0” என சொல்ல, அதற்கு பெய்ன், `` அதற்கு முதலில் நீங்கள் பேட் செய்ய வேண்டும் Big Head” என்று கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் கோலியை பிக் ஹெட் அதாவது தல என்று கூறிய‌ வார்த்தை தெளிவாக பதிவாகியுள்ளது.

கூல் கேப்டன்!

பெர்த் டெஸ்ட்டில் கோலி பெய்ன் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக்கொண்டு அருகருகே செல்ல அம்பயர் குறுக்கிட்டு சமாதானப்படுத்தினார். இருவருக்குமான உரையாடலை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

பெய்ன்: நேற்று நீங்கள் தானே கோலி தோற்றீர்கள். இன்று ஏன் கூலாக இருக்கிறீர்கள்.

அம்பயர்: வேண்டாம், போதும் பெய்ன்

பெய்ன்: நாங்கள் பேச அனுமதிக்கப்பட வேண்டும்.

அம்பயர்: முடியாது ஆட்டத்தை தொடருங்கள்.. நீங்கள் இருவரும் கேப்டன்கள்

பெய்ன்: நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். வேறு எதுவுமில்லை.

அம்பயர்: டிம் நீங்கள் கேப்டன்

பெய்ன்: அப்படியே கூலாக இருங்கள் விராட்!

மும்பை இந்தியன்ஸுக்கு ஆடப்போகிறேன்!

ஆரோன் ஃபின்ச்சுடன் நடந்த உரையாடல்கள் மூலம் ரோஹித்தின் கவனத்தை சிதறடிக்க முயற்சி செய்தார். பின்ச்சிடம் பெய்ன், இப்போது ரோஹித் சிக்சர் அடித்தால் நான் மும்பை இந்தியன்ஸை ஆதரிப்பேன் என்று கூறினார்.

சில ஓவர்கள் இப்படியே பேசிக்கொண்டிருந்தார் பெய்ன். ஆனால் ரோஹித் அதனை கவனிக்காமல் ஆடிக்கொண்டிருந்தார். கோலிங்வுட் தீம் பாடலை விசில் அடித்த பெய்னை ஆரம்பத்தில் ரோஹித் கண்டுகொள்ளவில்லை. அதனால் ஃபின்ச்சிடம் மீண்டும் பேசத்துவங்கினார் பெய்ன்.

பெய்ன்: பின்ச் நீங்கள் கிட்டத்தட்ட எல்லா அணிகளுக்கும் ஆடியிருக்கிறீர்கள் சரியா?

பின்ச்: பெங்களூரு தவிர..

பெய்ன்: பெங்களூரு தவிரவா?

பேபிசிட்டர் பன்ட்!

மெல்பெர்ன் டெஸ்ட்டில் பன்ட் மற்றும் பெய்ன் இடையே வாக்குவாதம் கொஞ்சம் எல்லை தாண்டியே இருந்தது.

பெய்ன்: பின்ச் உங்களுக்கு தெரியுமா, தோனி ஒருநாள் தொடருக்கு வந்துவிடுவார். அதனால் இவருக்கு இடமிருக்காது எனவே ஹரிகேன் ஹோபர்ட் அணிக்கு கூட்டி செல்வோம். நமக்கு அடித்து அட ஒருவர் தேவை.

பின்ச்: இவர் ஆடுவார் என நான் நம்பவில்லை

பெய்ன்: பின்ச் இது பன்ட்டின் நீட்டிக்கப்பட்ட ஆஸ்திரேலிய விடுமுறை. நல்ல அப்பார்ட்மெண்ட்டில் தங்கி ஓய்வெடுக்கட்டும்.

பெய்ன்: பன்ட்டை டின்னருக்கு அழைத்து செல்வேன். என்ன பன்ட் எனது குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலை செய்கிறீர்களா. நான் என் மனைவியுடன் திரைப்படத்துக்குச் சென்று வருவேன். அதுவரை குழந்தைகளை பார்த்துக் கொள்!

தற்காலிக கேப்டன் பெய்ன்!

பேபிசிட்டர் சீண்டலுக்கு பின் ரிஷப் பன்ட் பதிலுக்கு வசைபாடத்துவங்கினார். '' நாம் இன்று ஒரு சிற‌ப்பு விருந்தினரை பார்க்கிறோம். எனக்குத் தெரிந்து நான் எப்போதுமே தற்காலிக கேப்டன் பற்றி கேள்விப்பட்டதில்லை. இவருக்கு பேசுவது ரொம்ப பிடிக்கும், என்ன செய்வது வெறும் பேச மட்டும் தானே முடியும்'' என்று கிண்டல் செய்தார் பன்ட்.

உண்மையாலுமே பேபிசிட்டரான பன்ட்!

பெய்ன் - பன்ட் இடையேயான பேபிசிட்டர் சீண்டலுக்கு பின் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்னின் மனைவி, தன் குழந்தைகளோடு ரிஷப் பன்ட்டுடன் எடுத்துக்கொண்ட‌ புகைப்படம் வைரலாகியது. இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். ''ஆம் அது சுவாரஸ்யமான நிகழ்வு, நாங்கள் பிரதமரின் வீட்டுக்கு சென்றிருந்தோம். அங்கு ரிஷப் பன்ட் எனது குடும்பத்துடன் ஒரு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எனது மனைவி பன்ட்டுடன் எடுத்த புகைப்படம் தான் அது'' என்றார். மேலும் ரிஷப் பன்ட் சிறந்த வீரர் என்றும் குறிப்பிட்டார்.

நிறவெறி தாக்குதல்!

மெல்பெர்ன் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்களை தனது அபாரமான பந்துவீச்சால் ஜஸ்ப்ரித் பும்ராஹ் 151 ரன்களுக்கு சுருட்டினார். இதனால் இந்தியா 292 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்தக் கொண்டாட்டங்களை இந்திய ரசிகர்களாலும், வீரர்களாலும் மெல்பெர்ன் மைதானத்தில் முழுமையாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம் மெல்பெர்ன் மைதானத்தில் சில ரசிகர்கள் வீரர்களை நோக்கி தகாத வார்த்தைகளால் பேசியது, பாதகைகளை காட்டியது போன்ற செயல்கள் தான்.

இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியாவும் கண்டித்துள்ளது. கிரிக் இன்ஃபோ தளம் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவிடம் வீடியோ ஆதாரங்களை தந்துள்ளது. மேலும் ரசிகர்கள் தரப்பிலிருந்தும் புகார் தரபட்டுள்ளது.

மைதானத்தில் முதல் இரண்டு நாட்கள் ரசிகர்கள் நிறவெறி தொடர்பான கருத்துக்களை மைதானத்தில் கோஷமிட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். முதலில் உங்களுடைய விசா எங்கே என்று கிண்டலடித்தனர். பின்னர் இந்திய வீரர்களை திட்டினர். விக்டோரியா போலீஸுக்கு இந்தப் புகார்கள் அனுப்பப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மைதானத்தில் கேமரா மூலம் ரசிகர்களை தற்போது விக்டோரியா போலீஸ் கண்காணித்து வருகிறது. ரசிகர்களின் இந்தச் செயலை ஆஸ்திரேலிய ஊடகங்கள் சில விமர்சித்துள்ளன.

பின்னர் கோலி ஃபீல்டிங் செய்யும் போது அவரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வழக்கத்தில் உள்ள மோசமான சொல்லான "வான்கர்" என்ற வார்த்தையை கூறி திட்டினர்.

இதற்கு பதில் தரும் விதமாக கோலி தனது தொப்பியை கழட்டி வணக்கம் வைத்து தனது பதிலை தெரிவித்தார். கோலி ஆக்ரோஷத்தை காட்டாமல் அமைதியாக ரியாக்‌ஷன் மூலம் பதில் தந்தது அனைவரின் பாராட்டையும் பெற்றது. மைதானத்தில் கோலியின் இந்தச் செயலுக்கு இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

 

மேலும் படிக்க - "மோடி முதல் சச்சின் வரை இந்திய வெற்றிக்குக் குவிந்த வாழ்த்து ட்விட்டுகள்!"

.