This Article is From Jun 29, 2018

‘2019-க்குள் கருப்புப் பணம் பற்றிய தகவல்கள் கிடைத்துவிடும்!’- நிதி அமைச்சர் திடுக்

ஸ்விட்சர்லாந்து நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் பற்றிய அனைத்துத் தகவல்களும் 2019 நிதியாண்டுக்குள் கிடைத்துவிடும் என்ற திடுக் தகவலை தெரிவித்துள்ளார் இடைக்கால மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.

ஹைலைட்ஸ்

  • ஸ்விட்சர்லாந்து நேற்று இந்தியர்களின் டெபாசிட் குறித்து தகவல் வெளியிட்டது
  • இந்நிலையில் கோயல் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்
  • இடைக்கால நிதி அமைச்சராக பியூஷ் கோயல் செயல்பட்டு வருகிறார்
New Delhi:

ஸ்விட்சர்லாந்து நாட்டில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் பற்றிய அனைத்துத் தகவல்களும் 2019 நிதியாண்டுக்குள் கிடைத்துவிடும் என்ற திடுக் தகவலை தெரிவித்துள்ளார் இடைக்கால மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல்.

ஸ்விட்சர்லாந்து நேற்று ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டது. அதில், ‘இந்தியர்களால் ஸ்விட்சர்லாந்தில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் பணத்தின் அளவு 2017 ஆம் ஆண்டு, 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதன் மதிப்பு 1.01 ஸ்விஸ் ஃபிரான்க்ஸ் ஆகும்’ என்று குறிப்பிடப்பட்டது. இது இந்திய மதிப்பில் 7,000 கோடி ரூபாய் ஆகும். 

new notes

இந்நிலையில் பியூஸ் கோயல் செய்தியாளர்களைச் சந்தித்து பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்தார். அவர், ‘இந்தியாவுக்கும் ஸ்விட்சர்லாந்துக்கு ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதன்படி, 2018 ஜனவரி 1 முதல் 2019 மார்ச் 31 ஆம் தேதி வரை, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் இந்தியாவிலிருந்து டெபாசிட் செய்யப்படும் பணத்தின் தரவுகள் சேமிக்கப்படும். இந்த காலகட்டத்தில் யாராவது சட்டத்துக்கு புறம்பாக டெபாசிட் செய்திருந்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

இந்தியா, ஸ்விட்சர்லாந்திடம் பல மாதங்களாக கருப்புப் பணம் பதுக்கல் பற்றிய தகவல்களை கொடுக்குமாறு கேட்டு வருகிறது. இந்நிலையில், கோயலின் கருத்து கவனம் பெற்றுள்ளது.

கோயலின் செய்தியாளர்கள் சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘2014 ஆம் ஆண்டு, அனைத்து கருப்புப் பணத்தையும் எடுத்து வந்து நாட்டில் உள்ளவர்கள் வங்கி கணக்கில் 15 லட்ச ரூபாய் போடுவேன் என்றார். 2016 ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு கருப்புப் பணப் பிரச்னையைத் தீர்க்கும் என்றார். 2018 ஆம் ஆண்டு, ஸ்விட்சர்லாந்து இந்தியர்களின் டெபாசிட் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கூறியவுடன், அவை அனைத்தும் வெள்ளைப் பணம் என்கிறார்’ என்று ட்விட்டர் மூலம் விமர்சனம் செய்துள்ளார்.


 

.