SAARC Summit:பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தகவல் தெரிவத்துள்ளார்
New Delhi: பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்(Sushma Swaraj) தகவல் தெரிவத்துள்ளார். மேலும் அவர், ‘கார்டர்பூர் திட்டத்தை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டதால், இரு நாட்டுக்கும் இடையில் சுமுகமான அணுகுமுறை இருக்காது. பாகிஸ்தான் முதலில் தீவிரவாதத்துக்குத் துணை போவதை நிறுத்த வேண்டும்' என்று கறாராக பேசியுள்ளார்.பாகிஸ்தானின் லாகூரில், கார்டர்பூர் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பாகிஸ்தான் அரசு அழைப்பு விடுத்திருந்தது.
பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் அமைந்திருக்கும் கார்டர்பூர் ஷாஹிப் பகுதியில் தான் குருநானக் தனது கடைசி 18 ஆண்டுகளை கழித்துள்ளார். இந்தியாவின் டேரா பாபா நானக் பகுதியிருந்து சர்வதேச எல்லையைக் கடந்து ஷாஹிப் பகுதியை இணைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை கடந்த வாரம் அனுமதி வழங்கியது. பாகிஸ்தானும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டியது. இதையடுத்துதான், இன்று திட்ட தொடக்க விழா நடைபெறுகிறது. பாகிஸ்தான் அரசு குருநானக்கின் 550வது பிறந்தநாளில் 2019 ஆம் ஆண்டு இதனை திறக்க சம்மதித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டத்தால் இரு நாட்டுக்கும் இடையில் சுமுகமான உறவு திரும்பும் என்று நம்பப்பட்டது. இந்நிலையில் சுவராஜ், ‘சார்க் மாநாட்டில்(SAARC Summit) பங்கேற்குமாறு மத்திய அரசுக்கு, பாகிஸ்தானிடமிருந்து அழைப்பு வந்தது. அதற்கு நாங்கள் செல்லப் போவதில்லை. பாகிஸ்தான், தீவிரவாதத்துக்குத் துணை போவதை நிறுத்திக் கொள்ளும் வரை, அவர்களோடு நாம் நட்போடு இருக்கப் போவதில்லை.
இரு நாட்டுப் பேச்சுவார்த்தையும், கார்டர்பூர் திட்டமும் இரு வேறு விவகாரங்கள். இந்தத் திட்டத்துக்குக் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியா, பாகிஸ்தானிடம் பேசி வந்தது. இறுதியாக அவர்கள், திட்டத்தை செயல்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மட்டுமே இரு நாட்டுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து விடாது. தீவிரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடக்க சாத்தியமில்லை. எந்த கணத்தில் பாகிஸ்தான், தீவிரவாதத்துக்குத் துணை போவதை நிறுத்திக் கொள்கிறதோ, அந்த கணத்தில் பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக இருக்கும்' என்று பேசியுள்ளார்.