விமானப்படையில் உள்ள 2 விதமான போர் விமானங்களை இயக்கும் திறன் கொண்டவர் அபிநந்தன்
New Delhi: விங் கமாண்டர் அபிநந்தனின் பெயர் வீர் சக்ரா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உடன் நடந்த மோதலின் போது அந்நாட்டின் நவீன போர் விமானமான எஃப். -16-யை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார்.
அவரின் இந்த சாகசத்திற்காக வீர் சக்ரா விருது வழங்கப்பட வேண்டும் என்று விமானப்படை பரிந்துரை செய்துள்ளது. இதேபோன்று மிராஜ் 2000 ரக போர் விமானத்தை இயக்கி பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய 12 விமானிகளுக்கு வீர தீரத்திற்கு வழங்கப்படும் 'வாயு சேனா' விருது வழங்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
ராணுவத்தில் வழங்கப்படும் 3-வது உயரிய விருது வீர் சக்ரா விருது ஆகும். மிக உயர்ந்த விருது பரம் வீர சக்ரா. இதற்கு அடுத்த இடத்தில் மகா வீர் சக்ரா விருது உள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக விங் கமாண்டர் அபிநந்தன், ஜம்மு காஷ்மீரில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் அவரது பெயர் வீர் சக்ரா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அபிந்தன் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமானப்படை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அபிநந்தனுக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு விட்டதாகவும், அவர் விரைவில் புதிய பணியிடத்திற்கு செல்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உலகில் மிக் 21 ரக போர் விமானத்தில் இருந்து எஃப்.-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஒரே நபர் அபிநந்தன் ஆவார். கடந்த பிப்ரவரி 27-ம்தேதி இந்த சம்பவம் நடந்தது.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாலகோட்டில் தீவிரவாத முகாம்கள் கடந்த பிப்ரவரி 27-ம்தேதி அழிக்கப்பட்டன. அப்போது நடந்த ராணுவ தாக்குதலில் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கினார்.
மத்திய அரசின் முயற்சியை தொடர்ந்து நாடு திரும்பிய அபிநந்தனுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகியது.