This Article is From Apr 08, 2019

‘பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ஆதாரம் இதோ..!’- இந்திய விமானப்படை பளார்

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஏர் துணை மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர்

கடந்த பிப்பரவரி மாதம் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த F-16 ரக போர் விமானத்துடன் மோதலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

New Delhi:

கடந்த பிப்பரவரி மாதம் இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் விமானப் படையைச் சேர்ந்த F-16 ரக போர் விமானத்துடன் மோதலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மோதலில் கமாண்டர் அபிநந்தனின் மிக்-21 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தப்படுவதற்கு முன்னர் பாகிஸ்தானின் F-16 விமானமும் வீழ்த்தப்பட்டதாக இந்திய விமானப்படை கூறியிருந்தது. இது குறித்து ரேடார் ஆதாரங்களையும் இந்தியத் தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. 

இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஏர் துணை மார்ஷல் ஆர்.ஜி.கே.கபூர், ‘பிப்ரவரி 27 ஆம் தேதி, பாகிஸ்தான் தரப்பு F-16 ரக போர் விமானத்தைப் பயன்படுத்தியதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. அது சுட்டு வீழ்த்தப்பட்டதற்கும் எங்களிடம் ஆதாரம் இருக்கிறது' என்று கூறினார். 

5q3j22kk

ரேடார் படம்.

அவர் மேலும், ‘இரு நாட்டுப் போர் விமானங்களுக்கும் இடையில் நடந்த சண்டையில், பாகிஸ்தானின் F-16 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதேபோல இந்தியாவிற்குச் சொந்தமான மிக்-21 விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதிலிருந்து ஏர் விங் கமாண்டர் அபிநந்தன், பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய பின்னர், பாராஷூட் மூலம் தப்பித்தார். அவரது பாராஷூட் பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விழ்ந்ததால், அவர் அந்நாட்டு கஸ்டடியில் வைக்கப்பட்டார்' என்று கூறினார். 

பாகிஸ்தான் படியில் அபிநந்தன் 3 நாட்கள் இருந்ததை அடுத்து, அவர் ‘நல்லெண்ண அடிப்படையில்' விடுவிக்கப்பட்டார். அவரின் விடுவிப்புக்குப் பின்னர்தான் இரு நாட்டுக்கும் இடையிலான பதற்ற சூழல் தணிந்தது. 

அதே நேரத்தில், பாகிஸ்தானின் F-16 ரக போர் விமானம் வீழ்த்தப்பட்டதை, அந்த நாடு ஏற்க மறுத்தது. அதற்கு அமெரிக்கத் தரப்பும் சாட்சியம் சொல்லும் வகையில் கருத்து சொன்னது. இந்தப் பிரச்னை பூதாகரமானதை அடுத்துதான், இன்று இந்திய விமானப் படையைச் சேர்ந்த துணை மார்ஷெல் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார். 

துணை மார்ஷெல் முடிவாக, ‘பிப்ரவரி 27 ஆம் தேதி பாகிஸ்தான் F-16 விமானத்தைப் பயன்படுத்தியதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. பாதுகாப்பு காரணங்கள் கருதி அதைப் பொதுத் தளத்தில் வெளியிட முடியாது' என்று விளக்கினார். அதே நேரத்தில் இந்தியத் தரப்பு, சம்பவம் நடந்ததை நிரூபிக்க ரேடார் படங்களை மட்டும் வெளியிட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, புல்வாமாவில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பாலகோட் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்களில் குண்டு போட்டுத் தாக்கியது. அதைத் தொடர்ந்துதான், இரு நாட்டுக்கும் இடையில் பிப்ரவரி 27-ல் வான்வழி சண்டை ஏற்பட்டது. 

.