சுபம் கோயலுடன் 27 பேர் கலிபோர்னியா ஆளுநர் பதவிக்காக போட்டி போட உள்ளனர்
ஹைலைட்ஸ்
- சுபம் கோயலின் பூர்விக உத்தர பிரதேசம்
- கோயலுடன் சேர்ந்து 27 பேர் கவர்னர் பதவிக்காக போட்டி போடுவர்
- கோயல் இப்போது தான் பட்டப்படிப்பை முடித்துள்ளார்
New Delhi:
அமெரக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் ஆக 22 வயதே நிரம்பிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர் சுபம் கோயல் போட்டி போட உள்ளார். மொத்தம் 27 பேர், கலிபோர்னியா கவர்னர் ஆக போட்டி போட உள்ளனர். அதில் மிகவும் இளையவர் கோயல் தான். கோயலுக்கு உத்தர பிரதேசம் தான் பூர்விகம். சமீபத்தில் தான் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பற்றும் ஃபிலிம் ஸ்டடீஸ் கோர்ஸில் பட்டம் பெற்றுள்ளார். இந்தப் பதவிக்கு பெரிய கட்சியைச் சேர்ந்த பலரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கோயலின் துணிச்சல் கலிபோர்னியாவில் பலரை கவர்ந்துள்ளது.
அவர் எந்தக் கட்சியின் பின்புலத்தையும் சாராமல் இந்த தேர்தலில் நிற்கிறார். ஆளுநராக பதவியேற்றால், தன் செயல் திட்டம் என்ன என்பது குறித்து தொடர்ந்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். மேலும், ஒரு மைக் உடன் கலிபோர்னியா தெருக்களில் அவர் பிரசாரம் செய்வதை பலரும் வியப்பாக பார்த்து வருகின்றனர்.
கலிபோர்னியாவின் உச்சபட்ச பதவிக்கு போட்டிப் போடும் கோயல் தனது திட்டம் மற்றும் நோக்கம் குறித்து பேசினார். `கலிபோர்னியாவின் அரசை மாற்ற புதியவர்கள் தேவைப்படுகிறார்கள். அதனாலேயே என்னை நான் முன்னிருத்திகிறேன். நம் மாகாணம் பல விஷயங்களில் திணறி வருகிறது. அதை விடுவிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்.
தொழில்நுட்பம் தான், நம் காலத்தில் பல அன்றாட பிரச்னைகளை தீர்த்து வைத்துள்ளது. எனவே தொழில்நுட்பத்தை மக்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுப்பேன். மேலும், தேர்தலில் நிற்க பெரிய கட்சிகளின் பலம் இருக்க வேண்டும், நிறைய பணம் இருக்க வேண்டும் என்றெல்லாம் பலர் பிதற்றி வருகின்றனர். அதெல்லாம் தேவையில்லை. நல்ல செயல் திட்டமும், அதற்கேற்ற உழைப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம் என்பதை உணர்த்தத்தான் நான் தேர்தலில் போட்டியிடுகிறேன்' என்று பெருமிதத்தோடு கூறுகிறார் கோயல்.