ராணுவ பொறியியல் கல்லூரியில் பணியாற்ற வருகிறார் மேஜர் அனூப் மிஷ்ரா.
Lucknow: இந்திய ராணுவத்திற்கு நவீன ரக புல்லட் புரூஃப் ஆடைகளை வடிவமைத்த மேஜர் அனூப் மிஷ்ரா தற்போது குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டையும் வடிமைத்துள்ளார். இதுபோன்ற ஹெல்மெட்கள் தயாரிக்கப்படுவது உலகிலேயே முதன்முறை என்று கூறப்படுகிறது.
இந்த ஹெல்மெட் மூலம் ஏ.கே. 47 தோட்டாக்கள் 10 மீட்டர் தொலைவில் இருந்து சுடப்பட்டாலும் அவற்றால் தலைக்கு காயம் ஏதும் ஏற்படாது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் அளித்த பேட்டியில், 'அபேத்யா என்ற திட்டத்தின் கீழ் குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டை ராணுவ மேஜர் அனூப் மிஷ்ரா வடிவமைத்துள்ளார். அவர் ஏற்கனவே, குண்டுகள் துளைக்காத ஆடையை ராணுவதிற்கு வடிவமைத்தவர்' என்று கூறினர்.
பழமையான புல்லட் புரூஃப் ஆடையை அணிந்ததால், போர்க்களத்தில் குண்டுக்காயம் அடைந்த ராணுவ மேஜர் அனூப் மிஷ்ரா, நவீன ரக புல்லட் புரூஃப் ஆடையை வடிவமைத்துள்ளார். அவர் இந்திய ராணுவ பொறியியல் கல்லூரியில் பணியாற்றி வருகிறார்.
தனியார் நிறுவனத்தின் உதவியோடு, இந்திய ராணுவ பொறியியல் கல்லூரி துப்பாக்கிச் சூடு நடைபெறும் இடத்தை கண்டறியும் கருவியை கண்டுபிடித்துள்ளது. GunShot Locator எனப்படும் இந்த கருவியின் மூலம் தீவிரவாதிகள் துப்பாக்கியை பயன்படுத்தினால் அவர்கள் 400 மீட்டர் தொலைவிற்குள் இருப்பார்கள் எனறால், அவர்களை கண்டுபிடித்து விட முடியும்.
கடந்த 2016-17-ல் இந்திய ராணுவம் 50 ஆயிரம் புல்லட் புரூஃப் ஆடைகளை வாங்கியுள்ளது. மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 138 புல்லட் புரூஃப் ஆடைகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று, 1.58 லட்சம் குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்களை வாங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ராணுவத்தில் உள்ள பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அவர்கள் மூலம் ராணுவத்திற்கு தொழில் நுட்ப வலிமையை அதிகரிக்கவும் இந்திய ராணுவ பொறியியல் கல்லூரி மூலமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
போர்க்கள பொறியியல் யுத்திகள், கணினி தொழில்நுட்ப பயன்பாடு, ராணுவத்திற்கு தேவையான புதிய கருவிகளை வடிவமைத்தல் உள்ளிட்ட பணிகளை இந்த கல்லூரி மேற்கொள்கிறது.