தளபதி ராவத், பாகிஸ்தானின் பெயரைச் சொல்லவில்லை என்றாலும், அதற்கு எதிரான கருத்தாகவே இது பார்க்கப்படும்
New Delhi: தீவிரவாதம் என்பது நாடுகள் அதை ஊக்குவிக்கும் வரை இருக்கும் என்றும் அமெரிக்கா 9/11 தாக்குதலுக்குப் பிறகு எப்படி நடந்து கொண்டதோ அதைப் போன்று நடந்தால் மட்டுமே தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்றும் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாடுகள் தீவிரவாதத்தை உக்குவிக்கும் வரை அதைப் போக்க முடியாது. அந்த நாடுகள் தீவிரவாதத்தை முகமூடியாக பயன்படுத்தும். அந்த நாடுகள் அவர்களுக்கு ஆயுதங்கள் செய்து கொடுத்து, நிதி ஒதுக்கும். இப்படி இருக்கும் பட்சத்தில் நம்மால் தீவிரவாதத்தைக் கட்டப்படுத்த முடியாது,” என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவர் மேலும், “எப்படி அமெரிக்கர்கள், 9/11 தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்தைக் கையாண்டார்களோ, அப்படி நாமும் செய்யும் பட்சத்தில்தான் அதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். தீவிரவாதத்திற்கு எதிராக உலகளாவிய போர் தொடுப்போம் என்று அவர்கள் முழங்கினார்கள். அதைச் செய்ய தீவிரவாதிகளை தனிமைப்படுத்த வேண்டும். யாரெல்லாம் தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ அவர்களும் அதற்கு பதில் சொல்லவைக்கப்பட வேண்டும்.
FATF மூலம் சம்பந்தப்பட்ட நாட்டை கருப்புப் பட்டியலில் சேர்ப்பது முக்கியமான பணியாகும். சம்பந்தப்பட்ட நாட்டை ராஜதந்திர ரீதியாக தனிமைப்படுத்துவது முக்கியம்,” என்று கூறியுள்ளார்.
தளபதி ராவத், பாகிஸ்தானின் பெயரைச் சொல்லவில்லை என்றாலும், அதற்கு எதிரான கருத்தாகவே இது பார்க்கப்படும். இந்தியா, பல காலங்களாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் கூடாரமாக இருந்து வருவதாக குறிப்பிட்டு வருகிறது. மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதலுக்குப் பின்னணியில் கூட பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதிகள்தான் காரணம் என்று இந்தியா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
கடந்த ஜனவரி 1 ஆம் தேதி, இந்திய ராணுவத் தளபதியாக இருந்த பிபின் ராவத், முப்படைகளின் முதல் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார். இந்த புதிய பொறுப்பின் மூலம் படைகளுக்குத் தேவையான ஆயுதங்கள் கிடைப்பதில் நிலவும் சுணக்கத்தைப் போக்குவது, முப்படைகளின் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது, படைகள் குறித்து ராணுவ அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவது உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்வார் தளபதி ராவத்.