This Article is From May 25, 2020

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை சிறை வைத்ததா சீனா..!? - வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

கல்வான் பகுதியில் செய்யப்படும் அனைத்துப் பணிகளும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உள்ளேதான் செய்யப்படுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளது. 

லடாக்கில் இந்திய ராணுவ வீரர்களை சிறை வைத்ததா சீனா..!? - வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்!

இந்நிலையில், ராணுவத் தளபதி எம்எம் நரவானே, லெ பகுதியில் உள்ள தலைமையகத்துக்குச் சென்று நிலைமை குறித்து ஆராய்துள்ளார்.

ஹைலைட்ஸ்

  • சென்ற வாரம் இச்சம்பவம் நடந்துள்ளதாக தகவல்
  • இந்தத் தகவலை இந்திய ராணுவம் முற்றிலும் மறுத்துள்ளது
  • தொடர்ந்து இந்திய - சீன எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது
New Delhi:

லடாக்கில் சென்ற வாரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்கள் சிலரை, சீனத் தரப்பு சிறை வைத்திருந்ததாக திடுக்கிடும் தகவல் வந்துள்ளது. இரு தரப்பு பாதுகாப்புப் படையினருக்கும் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதாக NDTV-க்கு உள்வட்டாரத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பு கமாண்டர்கள் சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து பிரச்னை சுமுகமாக முடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது. 

பங்கோங் ஏரிக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து இந்திய ராணுவத் தரப்பு, பிரதமர் அலுவலகத்துக்கு முழுச் சம்பவத்தையும் விளக்கியுள்ளது. 

“கடந்த புதன் கிழமையன்று இந்திய ராணுவ வீரர்களுக்கும் சீன தரப்புக்கும் இடையில் பிரச்னை எழுந்த நிலையில், நம் நாட்டைச் சேர்ந்த சில வீரர்கள் சிறை வைக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட்டார்கள்,” என்று மூத்த அதிகாரி ஒருவர் NDTV-க்குத் தகவல் அளித்துள்ளார். 

இந்த சிறை வைப்பின்போது, இந்திய ராணுவ வீரர்களின் ஆயுதங்களும் சீனத் தரப்பால் பறிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஆயுதங்கள் இந்திய வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறுகிறார். 

ஆனால், இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர், கர்னல் அமன் ஆனந்த், “சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் யாரும் சிறை வைக்கப்படவில்லை. இதை நாங்கள் முற்றிலும் மறுக்கிறோம். செய்தி ஊடகங்கள் இதைப் போன்ற தெளிவில்லாத செய்திகளைப் பிரசுரிக்கும்போது அது தேசிய நலனிற்கு எதிராக முடிகிறது,” என்றார். 

mb2s9rg

லடாக் பகுதியில் முகாமிட்டுள்ள சீனப் படையின் செயற்கைக்கோள் புகைப்படம்.

சீன தரப்பின் சமீப கால நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனத் தரப்பு பாங்கோங் ஏரியில் மோட்டர் படகுகள் மூலம் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஷயம் தெரிந்த மூத்த அதிகாரி ஒருவர், “சமீப நாட்களாக இந்தப் பிரச்னை மிகப் பெரியதாக மாறியுள்ளது. இப்போது நிலைமை சற்றுப் பரவாயில்லை. ஆனால், இன்னும் முழு தீர்வு எட்டப்படவில்லை.

சீனத் தரப்பு, கல்வான் பகுதியில் மூன்று இடங்களில் டென்ட் போட்டுத் தங்கியுள்ளது” என்கிறார். கல்வான் ஆறு லடாக்கில் உள்ளது. 

இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவலுக்கு தினமும் தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கல்வான் பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்கவும் இந்தியத் தரப்பு முடுக்கிவிட்டுள்ளது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்த போரின் போது, கல்வான் பகுதி மிக முக்கியப் பங்காற்றியது. 

கல்வான் பகுதியில் இந்திய அரசு, சாலைக் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் உரசல் ஏற்பட்டது. இந்த சாலைக் கட்டுமானம் அங்கிருக்கும் உள்ளூர் வாசிகளுக்குப் பயனளிக்கும் என்று இந்தியா விளக்கியுள்ளது. 

கல்வான் பகுதியில் செய்யப்படும் அனைத்துப் பணிகளும் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக்கு உள்ளேதான் செய்யப்படுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் தெளிவுபடுத்தியுள்ளது. 

இந்நிலையில், ராணுவத் தளபதி எம்எம் நரவானே, லெ பகுதியில் உள்ள தலைமையகத்துக்குச் சென்று நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளார். லடாக்கில் உள்ள 14 ராணுவத் துறுப்புகளின் தலைமையிடமாக லெ உள்ளது. 

.