துபாய் விமான நிலையத்தின் டெர்மினல்-3ல் அந்த நபர் பணிபுரிந்து வந்துள்ளார்.
Dubai: கடந்த ஆண்டு துபாய் விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளில் இருந்து இரண்டு மாம்பழங்களை திருடியதற்காக கைது செய்யப்பட்ட இந்திய விமான நிலைய ஊழியரை நாடு கடத்துமாறு ஐக்கிய அரபு அமீரக (UAE) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கலீஜ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், சுமார் 6 திர்ஹாம் மதிப்புள்ள மாம்பழங்களை திருடியதற்காக 5,000 திர்ஹாம் அபராதம் விதிக்கப்பட்டார். அபராத தொகையை செலுத்திய போதும், 27 வயதான அந்த விமான நிலைய ஊழியரை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான விசாரணையின் போது, குற்றம்சாட்டப்பட்ட அந்த நபர் தான் துபாய் டெர்மினல் 3ல் பணிபுரிந்து வந்ததாக கூறியுள்ளார். அங்கு அவரது பணியானது, பயணிகளின் உடமைகளை கண்டெய்னரில் இருந்து கன்வேயர் பெல்ட்டில் ஏற்றுவதாகும்.
இந்தநிலையில், கடந்த ஆக.11 2017ஆம் ஆண்டு, பணியில் இருந்த அந்த நபர், கடுமையான தண்ணீர் தாகம் காரணமாக பயணிகள் உடமைகளை திறந்து தண்ணீரை தேடியுள்ளளார். அப்போது, ஒரு பெட்டியில் இருந்த 2 மாம்பழங்களை எடுத்து உண்டுள்ளார்.
இதைத்தொடரந்து, கடந்த ஏப்.2018ல் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து, அவர் தங்கியிருந்த அறையில் சோதைனையும் செய்துள்ளனர். எனினும் அங்கு எந்த திருட்டு பொருட்களும் பிடிபடவில்லை.
இதுதொடர்பாக பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அந்த நபர் பயணிகளின் உடமைகளை திறந்து திருடுவதை கண்டதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, 15 நாட்களுக்குள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிமை உள்ளது.