மிலன் 2020 என்ற பெயரில் நடத்தப்படும் போர்ப் பயிற்சியில் பல்வேறு நாடுகள் பங்கேற்கவுள்ளன.
ஹைலைட்ஸ்
- மிலன் 2020 என்ற பெயரில் விசாகப்பட்டினத்தில் மார்ச் 18-28-ல் போர்ப்பயிற்சி
- கொரோனா அச்சத்தால் போர்ப் பயிற்சி முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
- ஏதுவான தேதியில் போர்ப் பயிற்சி தொடங்கும் என கடற்படை அறிவிப்பு
New Delhi: கொரோனா வைரஸ் பாதிப்பின் எதிரொலியாக இந்தியக் கடற்படை மிலன் 2020 போர்ப் பயிற்சியை ஒத்தி வைத்துள்ளது.
எதிர்வரும் 18-ம்தேதி தொடங்கி 28-ம்தேதி வரையில் இந்தியக் கடற்படை சார்பாக விசாகப்பட்டினத்தில் போர்ப் பயிற்சி நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,'மிலன் 2020 - பல்வேறு நாடுகளின் போர்ப் பயிற்சி விசாகப்பட்டினத்தில் மார்ச் 18-28-ல் நடைபெறுவதாக இருந்தது. இதில் பங்கேற்கும் நாடுகளின் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டும், கொரோனா வைரஸால் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாகவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
போர்ப்பயிற்சி முகாமை நடத்துவது என்பது மிகப்பெரும் பொறுப்பு. பல்வேறு நாடுகளில் இதில் பங்கேற்க விரும்பின. ஒத்தி வைக்கப்பட்டுள்ள போர்ப் பயிற்சி முகாம், பின்னர் ஏதுவான தினத்தில் நடத்தப்படும்.
மிலன் 2020 போர்ப் பயிற்சி முகாமில் பங்கேற்க உலக நாடுகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்ற நாடுகள் அனைத்துக்கும் நன்றி. இந்த முகாமுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் புதிதாக டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உள்பட 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இன்று ஜெய்ப்பூரில் இத்தாலியச் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.