This Article is From Aug 20, 2018

கேரள கனமழை பாதிப்பு: ரூ.12.5 கோடி நிதியுதவி தரும் யூ.ஏ.இ தொழில் அதிபர்கள்!

இதுவரை 160-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

கேரள கனமழை பாதிப்பு: ரூ.12.5 கோடி நிதியுதவி தரும் யூ.ஏ.இ தொழில் அதிபர்கள்!
Dubai:

கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சேதாரங்களை ஈடு செய்வதற்கு பெரும் நிதித் தேவையுள்ளது. இதற்கு கை கொடுக்கும் வகையில் இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தொழில் அதிபர்கள், 12.5 கோடி ரூபாய் நிதியுதவி தருவதாக தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் பெய்து வரும் மழையால், இதுவரை 160-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். மேலும், 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அவசர நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கேரளாவில் மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகளும், பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் தான் கேரளாவில் பிறந்த தொழில் அதிபரான யூசஃப் அலி, லுலு குழுமத்தின் தலைவர், கலீஜ் டைம்ஸ் என்ற ஐக்கிய அரபு அமீரக பத்திரிகையிடம், ‘கேரள வெள்ள பாதிப்புகளுக்காக எங்கள் நிறுவனம் சார்பில் 5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும்’ என்றுள்ளார்.

அதேபோல ஃபாத்திமா ஜுவல்லர்ஸின் தலைவரான கே.பி.உசேன், ‘எங்கள் நிறுவனம் சார்பில் கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் தரப்படும். அதில் 1 கோடி ரூபாய் கேரள முதல்வரின் நிவாரண நிதி வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படும். மீதமுள்ள 4 கோடி ரூபாய் மருத்துவ உதவிகளுக்கு செலவு செய்யப்படும். அங்கு மருத்துவ உதவிகளை செய்ய கேரள சுகாதாரத் துறை செயலரிடம் பேசியுள்ளோம். எங்கள் சார்பில் மருத்துவர்கள் அனுப்பப்படுவர். மழை காரணமாக சூழ்ந்துள்ள வெள்ள நீரை வடியவைக்க அதிக நேரம் ஆகும் என்று தெரிகிறது. இதனால் அதிக அளவிலான தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அதை மனதில் வைத்து தான் இப்படிப்பட்ட முடிவை எடுத்துள்ளோம்’ என்று கலீஜ் டைம்ஸுக்குத் தெரிவித்துள்ளார்.

அதேபோல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பி.ஆர்.செட்டி, யுனிமோனி நிறுவனத்தின் தலைவர், 2 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், டிஎம் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைவர் அசாத் மூபென், 50 லட்ச ரூபாய் தருவதாகவும், 300 தன்னார்லர்களை அனுப்பி வைப்பதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 26 லட்சமாகும். இது அந்நாட்டின் 30 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

.