சக்தி வாய்ந்த வெடிகுண்டு பார்சலை பெறும் 14வது நபர் கமலா ஹாரிஸ் ஆவார்
Washington: வெள்ளியன்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செனட்டர் கமலா ஹாரிஸ் மற்றும் கோடீஸ்வரர் டாம் ஸ்டியருக்கு வெடிகுண்டு பார்சல் வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்களோடு சேர்த்து இதுவரை 14 பேர் இந்த மர்ம பார்சலை பெற்றுள்ளனர் என்று எப்.பி.ஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கமலா ஹாரிஸ் ஜனநாயக கட்சியின் செல்வாக்கு மிகுந்த பிரதமர் பதவிக்கு போட்டியிடும் தகுதி கொண்ட நபராக வளர்ந்து வருபவர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் கலிஃபோர்னியா மாகாணத்தின் பிரதிநிதி ஆவார். இவருக்கு வந்த மர்ம பார்சல் கலிஃபோர்னியாவில் கண்டுபிடிக்கப்பட்டதாக எப்.பி.ஐ கூறியுள்ளது.
நியூயார்க் நகரில் எப்.பி.ஐ அதிகாரிகள் மற்றொரு மர்ம பார்சலை கண்டறிந்துள்ளனர். அந்த பார்சல் தேசிய புலனாய்வு துறையின் முன்னாள் இயக்குனர் ஜேம்ஸ் கிளப்பர்க்கு வந்ததாக தெரிவித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் தற்போது வரை 14 மர்ம பார்சல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில், இருந்த வெடிகுண்டுகள் அனைத்துமே மிகவும் சக்தி வாய்ந்தது என்று எப்.பி.ஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்த வெடிகுண்டுகள் முன்னணி ஜனநாயக கட்சி தலைவர்களான முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஓபாமா, துணை அதிபர் ஜோ பைடன், முன்னாள் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த திங்கள் கிழமையிலிருந்து ஓபாமா, ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ போன்ற அமெரிக்க அதிபருக்கு எதிராக குரல் கொடுக்கும் அனைவரும் இந்த மர்ம பார்சலை பெற்று வருகிறார்கள். இது தொடர்பாக, புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த சீசர்(56) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது ஐந்து குற்றங்களுக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவர் குறித்து ஊடகங்கள் கூறுகையில், அமெரிக்க அதிபருக்கு எதிராக பேசுபவர்கள் அனைவருக்கும் டிவிட்டரில் முன்பு மிரட்டல் விடுத்ததாக கூறினர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் பேசுகையில், மர்ம பார்சல் அனுப்பும் நபர் குறித்து விசாரித்து வரும் சட்ட ஒழுங்கு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.